Published : 18 Sep 2022 04:55 AM
Last Updated : 18 Sep 2022 04:55 AM

50-வது ஆண்டு | நெல்லையில் பாழாகும் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்: பொலிவிழக்கும் வரலாற்றுச் சின்னம்

திருநெல்வேலி

திருநெல்வேலியின் முக்கிய அடையாளமாகத் திகழும் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் பராமரிப்பின்றி பழுதடைந்து வரும் நிலையில் சுவரொட்டிகளை ஒட்டியும், கழிவுகளை கொட்டியும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் அதை பாழாக்குவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பாலம் பயன்பாட்டுக்குவந்து 50 ஆண்டை எதிர் நோக்கியுள்ள நிலையில் இந்த அவலங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து தென்புறமாக அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதற்காக ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 1969-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதியால் இந்த பாலப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்டது: அப்போதைய மதிப்பில் ரூ.47 லட்சத்தில் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு 1973-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பதுபோல் இந்த பாலம் அமைந்திருந்ததால் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் என்று கருணாநிதியால் பெயர் சூட்டப்பட்டது.

700 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலம், 26 தூண்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட இந்தப் பாலம்தான் அந்த காலக்கட்டத்தில் ஆசியாவிலேயே முதன் முதலாக ரயில்வே தண்டவாளத்துக்கு மேல் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற சிறப்பையும், இந்தியாவில் முதன்முறையாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் பெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு 50 ஆண்டுகளை எட்டவுள்ள நிலையில் தற்போது பலவிதத்தில் அது பாழ்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மீண்டும் ஆக்கிரமிப்புகள்: பாலத்தின் மேல்தளத்தில் 24 மணிநேரமும் வாகனப்போக்குவரத்து அதிகமுள்ள நிலையில் ஆங்காங்கே உடைப்புகளும், கீறல்களும் தோன்றியுள்ளன. பக்கவாட்டு தடுப்புச் சுவரும், பாலத்தின் கீழ்தளமும் சேதமடைந்துள்ளது. கீழ்த்தளம் முடிவுறும் பகுதி மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் மாறி விடுகிறது.

கழிவு நீரோடைகள் சரிவர அமைக்கப்படாததால் மழைக் காலங்களில் தாழ்வான இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கை. பாலத்தின்கீழ் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் ஆக்கிரமிப்புகளை அகற்றி இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

சில இடங்களை திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிவிட்டனர். சில இடங்களில் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

அரசு சுவர்கள், பாலங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும், விளம்பரங்களை எழுதுவதற்கும் தடையுள்ள நிலையில் இந்த பாலத்தின் நாலாபுறமும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சுவரொட்டிகளை ஒட்டுவதும், பிளக்ஸ் பேனர்களை கட்டுவதுமாக நாசப்படுத்தி வருகின்றன.

இந்த பாலத்தில் நோட்டீஸ் ஒட்டவோ, விளம்பரங்களை செய்யவோ தடைவிதித்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு எழுதி வைத்தும் பயனில்லை.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள செல்லப்பாண்டியன் மேம்பாலத்தை அழகுபடுத்தி, இரவில் மின்னொளியில் ஜொலிக்க செய்துள்ள நிலையில் 50 ஆண்டுகளை நோக்கியுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தையும் சீரமைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.2 கோடியில் புனரமைக்க திட்டம்: இதனிடையே கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் பேசும்போது, ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை வாயிலாக ரூ.151 கோடிக்கான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் ஈரடுக்கு மேம்பாலம் உட்பட 8 நெடுஞ்சாலைகள் ரூ.69 கோடியில் சீரமைக்கப்படவுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்தை ரூ.2 கோடியில் புனரமைத்து, அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

ஈரடுக்கு மேம்பாலம் புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கு அரசு உரிய நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதிஒதுக்கீடு செய்து, பணிகளை தரமாக மேற்கொண்டால் மட்டுமே பாலம் அழிவிலிருந்து மீளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x