சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

அரியலூரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து தேவாலயம்: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

Published on

சென்னை: அரியலூரில் உள்ள இந்து மத கோயில்களுக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயம் மற்றும் கல்லறையை அகற்றக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை, தேவாலய நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டத்தில் உள்ள சாலக்கரை கிராமத்தைச் சேர்ந்த இரட்டை பிள்ளையார் கோயிலின் தர்மகர்த்தா சுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்துக்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் எங்கள் கிராமத்தில், சமீபகாலமாக சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி வருகின்றனர். வேறு கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த கிறிஸ்துவர்களால், சாலக்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சர்வேஸ்வரன் மற்றும் அய்யனார் கோயிலுக்கு சொந்தமான 90-க்கும் மேற்பட்ட ஏக்கர், இலுப்பை தோப்பில் உள்ள மூன்றரை ஏக்கர், இரட்டை பிள்ளையார் கோயிலின் குளத்தை ஒட்டிய மூன்றரை ஏக்கர் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆக்கிரமித்தவர்களால் சின்னப்பர் தேவாலயம் கட்டப்பட்டதோடு, கல்லறையும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. சாலக்கரை ஊர் பொதுமக்களின் கோரிக்கையின்படி, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், காவல் துறையிடம் கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் மனு அளித்தேன். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கிறிஸ்தவர்கள் எங்கள் கோயில் வழிப்பாடுகளில் தலையிடுவதோடு, திருவிழாக்களை தடுக்கும் வகையிலும் செயல்படுகின்றனர்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தேவாலய நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in