Published : 17 Sep 2022 01:36 PM
Last Updated : 17 Sep 2022 01:36 PM

“தமிழ்ச் சமூகத்துக்கு உன்னத வளர்ச்சியை திமுக அரசு உருவாக்கும்” - பெரியார் திடலில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் உருவாக்கித் தரும் கடமையைத் திமுக ஆட்சி செய்யும்” என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திருச்சியில் அமையவுள்ள ‘பெரியார் உலகம்’ அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கோட்டையிலே சமூக நீதியினுடைய உறுதிமொழியை எடுக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு பத்து நிமிடம் உரையாற்றிவிட்டு உங்களிடமிருந்து விடைபெற வேண்டும் என்ற நிலையில் உங்கள் அனுமதியோடு நான் நின்று கொண்டிருக்கிறேன். பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன், என்று சொன்னால் நான் எனது தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்றுதான் பொருள். தாய் வீட்டுக்கு மகன் வருவது ஆச்சரியம் அல்ல. பெரியார் திடலுக்கு வருவதன் மூலமாக, உள்ளபடியே சொல்கிறேன், நாங்கள் புத்துணர்ச்சி பெறுகிறோம், உற்சாகம் அடைகிறோம், எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்கிறோம்.

செப்டம்பர் 17ம் நாள் அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் என்பதற்காக, அந்த நாளில் மட்டும் இந்தத் திடலுக்கு நாங்கள் வந்தவர்கள் அல்ல, என்றைக்கும் வந்திருக்கிறோம், என்றைக்கும் வந்துகொண்டிருப்போம். ஆக, இப்படி அடிக்கடி வரக்கூடியவர்கள் நாங்கள். அடிக்கடி வருவதால் எங்களை விருந்தினர் என்று சொல்ல முடியாது. நாங்களும் இந்த வீட்டிற்கு உரியவர்கள், இந்த வீட்டைச் சார்ந்தவர்கள், அந்த முறையில்தான் வந்திருக்கிறோம்.

திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் திடல் தலைமையகம் அல்ல, இந்தத் தமிழினத்திற்கே இதுதான் தலைமையகம் என்று சொல்லத்தக்க வகையில் இந்தத் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. சமூக நீதியின் தலைமையகமாக, சமத்துவத்தின் தலைமையகமாக, பகுத்தறிவின் தலைமையகமாக, தமிழின எழுச்சியின் தலைமையகமாக. பெண்ணுரிமையின் தலைமையகமாக இந்தப் பெரியார் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் நாளை, சமூகநீதி நாளாக நான் அறிவித்து, அந்த நாளில் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறேன். இது பெரியாருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று மட்டும் நீங்கள் கருத வேண்டாம் - இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை! இந்த நாட்டுக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை!

அதேபோல் பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தந்தை பெரியார், உலகத் தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

60 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்து நமக்கெல்லாம் நாளும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய ஆசிரியர். அத்தகைய திசைவழியே திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிச்சயமாக செய்யும். இதுவே தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x