Published : 17 Sep 2022 12:52 PM
Last Updated : 17 Sep 2022 12:52 PM

“தியாகத்தை எண்ணிப் பாருங்கள்” - பண்ருட்டி ராமச்சந்திரன் மீதான இபிஎஸ் விமர்சனத்துக்கு ஒபிஎஸ் பதில்

ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: "பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்து, அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தகவல்களை பலரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரின் தொண்டு, தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்த இபிஎஸ் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன், பெரியார் முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை அனைவருடனும் பயணித்தவர்.

கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், பண்ருட்டி ராமச்சந்திரனை உலகத்திலே உச்சபட்சமாக இருக்கும் ஐநா சபையில் உரையாற்ற அனுப்பிவைத்தார். அங்கு உரையாற்றி அதிமுகவுக்கு பெருமையை பெற்றுத்தந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தகவல்களை பலரும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அவரின் தொண்டு, தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 21 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றியவன் நான். அவரது உள்ளத்தில், எண்ணத்தில், மனதில் நான் இருப்பதை பலமுறை ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, அவரது சொல்தான் எனக்கு வேதவாக்கு.

அதிமுக ஏழை, எளியவர்கள், தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அவர்கள்தான் யார் தலைமை பீடத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் குறித்த கேள்விக்கு, "அரசு தன் கடமையை செய்கிறது. யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ, தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக, "எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது எனவும், அவரின் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது" எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து, "பண்ருட்டி ராமச்சந்திரன் எந்தக் கட்சிக்கு போய் அறிவுரை கூறுகிறாரோ, அந்தக் கட்சிகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனவே, அவரது அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை. அதிமுக கிளைச் செயலாளருக்கு இருக்கும் தகுதிகூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கிடையாது" என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x