Published : 17 Sep 2022 03:45 AM
Last Updated : 17 Sep 2022 03:45 AM

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.600 கோடியில் மதுரையில் `டைடல் பூங்கா' - முதல்வர் அறிவிப்பு

மதுரையில் நேற்று நடைபெற்ற `தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' தென்மண்டல மாநாட்டில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் உள்ளிட்டோர்.

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில், ரூ.600 கோடி மதிப்பில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் மதுரையில் தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் துறைச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், தொழில் துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 3.37 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

சுங்கடிச் சேலைகள், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், அப்பளம் ஆகிய தயாரிப்புகளுக்கு மதுரை பெயர் பெற்றது. தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில், 18 பொருட்கள் தென்தமிழகத்தைச் சேர்ந்தவை. இதே பகுதியைச் சேர்ந்த மேலும் 14 பொருட்கள் புதிதாக புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளன.

பொது வசதி மையம்

மதுரை அருகேயுள்ள விளாச்சேரியில் பொம்மைக் குழுமம், தூத்துக்குடியில் ஆகாயத்தாமரைக் குழுமம், ராஜபாளையத்தில் மகளிர் நெசவுக் குழுமம் ஆகியவற்றை ரூ.9.82 கோடியில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன், காஞ்சிபுரம் நரிக்குறவர் பாசிமணிக் குழுமம், திருநெல்வேலியில் சமையல் பாத்திரக் குழுமம், திருப்பத்தூரில் ஊதுபத்திக் குழுமம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச்சிற்பக் குழுமம், கிருஷ்ணகிரியில் மூலப்பொருட்கள் கிடங்கு குழுமம், ஈரோட்டில் மஞ்சள்தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம், பவானியில் ஜமக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம் ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம் அமைக்கப்படும்.

நாட்டில் எளிமையாகத் தொழில்புரிதல் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தைப் பிடிப்பதே நமது இலக்கு. அதேபோல, `ஸ்டார்ட் அப் இந்தியா' வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் தமிழகம் பல படிகள் முன்னேறியுள்ளது. சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்கான `லீடர்' அங்கீகாரத்தை தற்போது பெற்றிருக்கிறது.

2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்னும் இலக்கை அடைய, ஏற்றுமதி வர்த்தகம் முக்கியமாகும்.

பதிவு செய்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் குறித்த நிகர்நிலைத் தரவுகளைப் பெற, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை அமைச்சகத்துடன் தமிழக அரசு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியை தமிழகத்தின் இரண்டாம், மூன்றாம் நகரங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக கோவையில் டைடல் நிறுவனம் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கியுள்ளது. மேலும், திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் உதகை ஆகிய இடங்களில் புதிதாக டைடல் பூங்காக்களை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில், மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.

முதல்கட்டமாக 5 ஏக்கரில் அமையும் இதை டைடல் நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சி ஆகியவை இணைந்து அமைக்கின்றன. இந்த பூங்காவை டைடல் நிறுவனம் நிர்வகிக்கும். இரண்டாம் கட்டமாக மேலும் 5 ஏக்கரில் இப்பூங்கா விரிவுபடுத்தப்படும்.

தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமையும் இந்தப் பூங்காவால் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

விழாவில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்தார். “யுனிசெப், பள்ளிக்கல்வித் துறை, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 1.56 லட்சம் மாணவர்கள், 3,120 ஆசிரியர்கள் தொழில்திறன் பயிற்சி பெறுவர். மாணவர்களை வருங்காலத் தொழில்முனைவோராக இத்திட்டம் மாற்றும்” என்றார் முதல்வர்.

சொத்து மீதான கூடுதல் கடனுக்கு பதிவு செய்யத் தேவையில்லை

தொழில்முனைவோர் தங்களது சொத்துகளை அடமானமாகக் கொடுத்து கடன் பெறும்போது, அவற்றின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப் பத்திரம் ஒப்படைத்து (எம்ஓடி) சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.

அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது, ஒவ்வொரு முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் திரும்பவும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால், காலவிரயம் ஏற்படுவதுடன், கடன் பெறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது, மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்ற நடைமுறை கொண்டுவரப்படும் என்று விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x