

மதுரை: குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து போலி பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரத்தைப் பதிவுத் துறை அதிகாரிகளுக்கு வழங்கும் உத்தரவை ஒரு வாரத்துக்குள் முதல்வர் வழங்குவார் என பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் செயல்பாட்டில் பிரச்சினை இருப்பதால் பதிவுப்பணி தாமதமாக நடப்பதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடை, சொக்கிகுளம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் இத்துறையின் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று ஆய்வு நடந்தது. பதிவுத் துறைச் செயலர் ஜோதி நிர்மலாசாமி, ஐஜி சிவன்அருள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப்பின் அமைச்சர் பி.மூர்த்தி கூறியது: வங்கிகளில் கடன் பெறுவோர் எம்ஓடி என்ற ஆவணப் பதிவுக்காக வங்கி அதிகாரிகள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு இனிமேல் நேரில் வரவேண்டியதில்லை. ஆன்லைனிலேயே பதிவு செய்துகொள்ளலாம். ஈடுகடன், கூடுதல் கடன் உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களையும் வங்கி அலுவலர்கள் ஆன்லைனிலேயே பதியலாம்.
மென்பொருள் இணைப்புக் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து நேரில் ஆய்வு செய்தோம். ஒரு பத்திரம் பதிய 10 முதல் 12 நிமிடங்களானது. கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் நேரடியாக ஒரு ஆவணத்தைப் பதிவு செய்தபோது 2 நிமிடங்களில் பணி முடிந்தது. இனிமேல் மென்பொருள் செயல்பாட்டால் காலதாமதம் ஏற்படாது.
பதிவுத் துறை அதிகாரிகளே போலி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதைச் செயல்படுத்தும் வகையில் ரத்து செய்யும் அதிகாரத்தை நமது பதிவுத் துறை அதிகாரிகளுக்கு ஒரு வாரத்துக்குள் வழங்கும் வகையில் முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எந்தத் தேதி வரையிலான போலி ஆவணங்களை ரத்து செய்யலாம் என்பதற்கான கால அளவு ஏதும் இல்லை. போலி ஆவண ரத்துக்காக நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை இனி ஏற்படாது.
கடந்தாண்டில் செப்.16 வரை 10.92 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்த வகையில் ரூ.5,540 கோடி வருமானம் கிடைத்தது. நடப்பாண்டில் இந்த நாள் வரை 16 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டத்தில் ரூ. 7,865 கோடி வருவாய் ஈட்டியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.