

புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, "இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் அதிமுகவுடன் இணைந்து பணியாற்றும். இது திணிக்கப்பட்ட தேர்தல். இதற்கு காரணமானவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
இதனை நெல்லித்தோப்பு தொகுதி மக்களும் நன்கு அறிவார்கள். அதிமுகவுக்கு ஆதரவு என்பது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து எடுக்கப்பட்ட முடிவு. தேர்தல் பிரச்சாரம் செய்வோம், குழுக்கள் அமைப்போம். தேர்தலில் முறைகேடுகள், பணபலம். அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது. பொது தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் தேர்தல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று" என்றார்.
இடைத்தேர்லில் தங்களை ஆதரிக்குமாறு அதிமுக தரப்பில் கோரப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.
பின்னர், தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம் மற்றும் நெல்லித்தோப்பு அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் ஆகியோர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.