

சென்னை: சென்னையில் 2,196 கடைகளில் நடத்திய சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகத்தால், தடை செய்யப்பட்ட 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துவோரிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பொதுமக்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவு வந்து செல்கின்றனர்.
இப்பகுதிகளில் உள்ள கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும், அதைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரையில் தூக்கிஎறிவதாலும் கடலில் கலந்து கடல்வாழ்உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இத்தகு சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
கடற்கரைப் பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாத கடற்கரைப் பகுதிகளாக பராமரிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைப் பகுதிகளில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
மேலும், அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவரும் அல்லது பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் இந்த மாதத்தில் 699 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய 61 கடை உரிமையாளர்களிடமிருந்து 16.4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.6,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெரினாவில் குப்பைத் தொட்டிவைக்காத கடை உரிமையாளர்கள், குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.15,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி முழுவதும் கடந்த 7-ம் தேதிமுதல் 13-ம் தேதி வரை 6,787 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2,196 உரிமையாளர்களிடமிருந்து 3 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 லட்சத்து 15 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.