Published : 17 Sep 2022 07:14 AM
Last Updated : 17 Sep 2022 07:14 AM
சென்னை: தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்து சீரமைக்க நிதியுதவி கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து நிதியுதவி எதுவும் பெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் இருந்து திட்ட மதிப்பீடு பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு, 5 ஆண்டுகள் முடிந்த பின்னரே மறுமுறை நிதியுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மூலம், விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதி மற்றும் அரசாணையில் உள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும்.
தொடர்ந்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் கூடிய முன்மொழிவு சிறுபான்மையினர் நல இயக்குநரின் பரிந்துரைக்கு அனுப்பப்படும். மேலும், விவரங்களை அறிந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்கீழ் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT