இளம் தலைமுறையினருக்காக கோ-ஆப்டெக்ஸ் ஏற்பாடு: கைத்தறி நெசவு குறித்த விழிப்புணர்வு சுற்றுலா- முன்பதிவு செய்ய இன்றே கடைசி

இளம் தலைமுறையினருக்காக கோ-ஆப்டெக்ஸ் ஏற்பாடு: கைத்தறி நெசவு குறித்த விழிப்புணர்வு சுற்றுலா- முன்பதிவு செய்ய இன்றே கடைசி
Updated on
1 min read

இன்றைய நவீன நாகரிகச் சூழலில் கைத்தறி என்பது அருகிவரும் ஒன்றாக மாறிவிட்டது. பாரம்பரிய மிக்க காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், ஆரணிப் பட்டுப் புடவைகள், வண்ணமயமான செட்டிநாடு காரைக்குடி சேலைகள், மதுரை கோடம்பாக்கம் சேலைகள், சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் ஆகிய தமிழ் மண்ணின் மரபை உலகுக்கே பறைசாற்றும் சேலை ரகங்களை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் மிகவும் குறைந்துவிட்ட நிலை உள்ளது.

எனினும் இந்த சேலைகளுக்கான தேவையும் பயன்பாடும், கைத்தறியை வாங்கி மகிழும் வாடிக்கையாளர்களிடையே அதிகரித்த வண்ணமே உள்ளது. கைத்தறித் துணி வகைகளை உற்பத்தி செய்கின்ற எளிய நெசவாளர்களையும், அவர்களின் உழைப்பையும் அங்கீகரிக்க வேண்டும்.

தமிழர்களின் உன்னதமான கைத்தறி நெசவுத் தொழிலை இன்றைய இளைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும். இதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஒரு புதிய முயற்சியாக மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி உற்பத்தி பகுதிகளுக்கு இளைய தலைமுறை வாடிக்கை யாளர்களை ‘விழிப்புணர்வுச் சுற்றுலா’ அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 25 வாடிக்கையாளர்களை, உலகப் புகழ்வாய்ந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் இல்லங்களுக்கே நேரிடையாக வரும் 26.11.2016 அன்று அழைத்து செல்ல கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டுள்ளது.

எனவே, இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் கைத்தறி குழும உதவி பொதுமேலாளர் எஸ்.பழனிச்சாமியை 94449 53739 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தங்களுடைய பெயரை இன்றைக்குள் (நவம்பர் 15) பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இதற்கான கட்டணமாக ரூபாய் 750 -ஐ வரைவோலையாக (D.D. in the name of T.N.H.W.C.S. Ltd.) கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். நபர்களை தேர்ந்தெடுத்து இறுதி செய்யும் முழு உரிமை கோ-ஆப்டெக்ஸுக்கு மட்டுமே உண்டு.

இந்த அரிய வாய்ப்பை வாடிக் கையாளர்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் பயன்படுத் திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கோ-ஆப்டெக்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in