

ராமேசுவரம்: ராமேசுவரம் தீவுப் பகுதியில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன்களுக்கு ஏற்பட்டி ருக்கும் ஆபத்தை தவிர்க்க, பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உலகின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில் பிளாஸ்டிக்குகள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளில், மக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக்கில் பெரும் பகுதி கடலில்தான் கழிவாக சேர்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கடலில் சேரும் ஆயிரம் கோடி கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சு றுத்தலாக இருப்பதுடன், கட லின் சூழலையும் பாதிக்கின்றன. இதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தூய்மை யான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடல் தூய்மை பிரச்சாரத்துக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில் சர்வதேச அளவில் கடற்கரையை தூய்மைப் படுத்தும் தினம் செப்டம்பர் 17 (இன்று) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முக்கிய ஆன்மிகத் தலமான ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் பவளப் பாறைகளில் தேங்கி கடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் திமிங்கலம் வரை உட்கொள் ளப்பட்டு அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மத்திய அரசு தடை விதிக்கும் முன்பே ராமேசுவரம் தீவில் பிளாஸ் டிக் கப், பைகள் பயன்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. அதேசமயம் தன்னார்வலர்கள் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முயன்றாலும், ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ராமேசுவரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போகிறது.
ராமேசுவரம், பாம்பன், தனுஷ் கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் சுகாதார அலுவலர்கள் மூலம் தினமும் ஆய்வு நடத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக் கையாக உள்ளது.