பிரதமரின் அறிவிப்பால் கருப்பு பணத்தை விட கள்ள நோட்டை தடுக்க முடியும்: வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கருத்து

பிரதமரின் அறிவிப்பால் கருப்பு பணத்தை விட கள்ள நோட்டை தடுக்க முடியும்: வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கருத்து
Updated on
1 min read

பிரதமரின் அறிவிப்பின் மூலம் கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்க முடியாது. ஆனால், கள்ள நோட்டுகளை தடுத்துவிடலாம் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை கட்டுப்படுத்த, இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என பேசிக்கொண்டு இருந்தனர். அது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் வங்கியில் வந்து மொத்தமாக மாற்றும்போது யார் என்பது தெரிந்துவிடும்.

வங்கியில் கொண்டுவந்து பணத்தை கொடுத்து ரூ.100 அல்லது ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் கள்ள நோட்டு தயாரிப்பவர்களால் உடனடியாக ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை தயாரிக்க முடியாது. இந்த திட்டத்தை வரவேற்பது என்பதை விட இதனால் கருப்பு பணத்தை நிறுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

கருப்பு பணம் என்பது எங்கும் பணமாக இல்லை. வெளிநாட்டுக்கு யாரும் பணமாக பரிமாற்றம் செய்வதில்லை. சுவிஸ் வங்கியில் பரிமாற்றமும் அவ்வாறு நிகழ்வ தில்லை. இங்கு உள்ள பணம் அங்கு செல்லாது என்பதால் டாலராக மாற்றுகின்றனர். எனவே கறுப்பு பணத்தை விட கள்ள நோட்டை பணப் புழக்கத்தில் இருந்து வெளியேற்ற உதவியாக இத்திட்டம் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்பே தெரியும்

பிரபல பொருளாதார நிபுணர் கூறும்போது, “மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வருவது பெரும் தொழில் அதிபர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தெரியும். ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு தொழில் அதிபர் என்னை வந்து சந்தித்து, என்னிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளன. அவற்றை நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தர முடியுமா.. இப்படி மாற்றித் தந்தால் 25 சதவீதம் கமிஷன் தருவ தாகவும் கூறினார். நோட்டுகளை மாற்றுவதற்கான காரணத்தை கேட்டபோதுதான் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திட்டத்தை பற்றிக் கூறினார்.

இந்த திட்டத்தால் அரசியல் கட்சி களின் அஸ்திவாரம் ஆடிவிடும். பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் இதில் சிக்கிவிடுவார்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in