திருச்சி | நீதிமன்ற அனுமதி பெற்று நடிகர் சிவாஜி சிலை விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி | நீதிமன்ற அனுமதி பெற்று நடிகர் சிவாஜி சிலை விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் திறக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறைஅமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட தென்னூர் ஆட்டுமந்தை தெருவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திமுக முதன்மைச் செயலாளரும், மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடன் கூறியது: தனியாருக்கு சொந்தமான இடத்தில் முறைப்படி அனுமதி பெற்று இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, அரசு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மாநகரின் பிற பகுதிகளில் வட்டச் செயலாளர்கள் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைத்தால், அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை நாங்கள்தான் அமைத்தோம். நீதிமன்ற உத்தரவு காரணமாக அப்போது திறக்க முடியவில்லை. நீதிமன்ற அனுமதி பெற்று விரைவில் அந்த சிலை திறக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் வக்பு வாரிய சொத்துகள் எனக்கூறி, சில கிராமங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நில பத்திரப்பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். அதுகுறித்து முறைப்படி ஆய்வு செய்யப்படும் என்றார்.

சிலை திறப்பு நிகழ்ச்சியில் மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, எம்எல்ஏ காடுவெட்டி ந.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in