Published : 17 Sep 2022 02:00 PM
Last Updated : 17 Sep 2022 02:00 PM
திருவண்ணாமலை: தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 82 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், பெண்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா திருவண்ணாமலை கீழ்நாத்தூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, காரில் ஏறி புறப்பட சென்றார்.
அப்போது அவரிடம், பெண்கள் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தங்களை பணியில் இருந்து நிறுத்திவிட்டு, புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள தூய்மை பணியாளர் தேர்வில் தங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
மேலும் அவர்கள், அமைச்சரிடம் மனுவை அளித்தனர். இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பெண்கள் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஒப்பந்த அடிப்படையில் கடந்த 13 ஆண்டுகளாக தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறோம். 82 தொழிலாளர்கள் பணியில் உள்ளோம். மாதம் ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. நாங்கள் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ள அடித்தட்டு மக்கள்.
எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. இந்நிலையில், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறி, எங்களை நீக்கி விட்டு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எங்களுக்கும் குடும்பம் உள்ளது. பணியில் இருந்து வெளியேற்றினால், பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும்.
மேலும், ஆணையரின் உத்தரவு படி, தினக்கூலி அடிப்படையில் தூய்மை பணியை மேற்கொள்ள நேரிடையாக நியமனம் செய்யப்படவுள்ளனர். இப்பணியிடத்தில் எங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டும். வேலை இல்லாமல் போனால், எங்களது எதிர்காலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT