அன்னிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை? - உயர் நீதிமன்றம் கேள்வி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், முதுமலை வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான கருத்துரு, நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை? தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அக்டோபர் 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மெதுவாக செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. சுற்றுச்சூழலையும், வனத்தையும் பாதுகாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டாவிட்டால், அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும். எனவே தனியார் நிறுவனங்களை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு நிதியைப் பெற்று விரைந்து அன்னிய மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in