புதுச்சேரி | தலைவர்கள் படங்களை முகக்கவசமாக அணிந்து சங்கு ஊதி போராட்டம் நடத்திய பாப்ஸ்கோ ஊழியர்கள்

புதுச்சேரி | தலைவர்கள் படங்களை முகக்கவசமாக அணிந்து சங்கு ஊதி போராட்டம் நடத்திய பாப்ஸ்கோ ஊழியர்கள்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர், அமைச்சர் என தலைவர்கள் படங்களை முகக்கவசமாக அணிந்து, நிலுவை ஊதியம் தரக் கோரி சங்கு ஊதி பாப்ஸ்கோ ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே மூன்றாம் நாள் போராட்டம் ஏஐடியூசி பொதுச்செயலர் சேது செல்வம் தலைமையில் இன்று நடந்தது. துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சாய் சரவணக்குமார் புகைப்படங்களை முகக்வசங்களாக அணிந்து, கோரிக்கைகளை தீர்க்குமாறு சங்கு ஊதி போராட்டம் நடத்தினர். போராட்டம் தொடர்பாக சேது செல்வம் கூறுகையில், "புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனத்தில் சுமார் 1000 பேர் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 55 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், இங்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாப்ஸ்கோ மூலம் கடந்த ஆண்டு தீபாவளி பஜார் நடத்தப்பட்டது. இதற்கு மானியமாக 62 லட்சம் ரூபாய் பாப்ஸ்கோவிற்கு அரசு வழங்க வேண்டியுள்ளது. இந்த பணத்தை அரசு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

புதுச்சேரி அரசு பாப்ஸ்கோ மூலம் 47 ரேஷன் கடை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கடைகளுக்கு 6 வருடங்களுக்கு மேலாக வாடகை கொடுக்காமல் அரசு இருந்து வந்தது. அரசு இதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், இந்த நிதியை கொடுக்காமல் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் காலம் கடத்தி வருகிறார்கள். இந்தக் கடைகளுக்கு வழங்க வேண்டிய வாடகை தொகை ரூ.1 கோடியே 30 லட்சத்தை உடனடியாக பாப்ஸ்கோவிற்கு வழங்கிட வேண்டும்.

மேலும், பொங்கல் பொருட்கள் பாப்ஸ்கோ மூலம் இலவசமாக பொதுமக்களுக்கு சர்க்கரை, அரிசி, வெல்லம், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், முந்திரி, திராட்சை, ஏலக்காய் வழங்கியது. இதற்கு வழங்க வேண்டிய மொத்தம் கமிஷன் தொகையாக ரூ.31 லட்சம் வழங்க வேண்டும். பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 55 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று 3-ம் நாளாக போராட்டம் நடத்துகிறோம். அரசு தரப்பு அமைதியாக உள்ளதால் சங்கு ஊதி போராட்டம் நடத்தினோம்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in