அன்புமணி | கோப்புப் படம்
அன்புமணி | கோப்புப் படம்

புதிய மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Published on

சென்னை: சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அன்புமணி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் எந்த இடத்திலும் விதிப்படி மணல் அள்ளப்படவில்லை. அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடல்நீர் உட்புகுதல் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது நாட்டிற்கும், மக்களுக்கும் ஆபத்தானது.

தமிழகத்தில் ஏற்கனவே 25-க்கும் கூடுதலான மணல் குவாரிகள் உள்ளன. புதிதாக 9 மணல் குவாரிகளை திறக்கவும், 30 மாட்டு வண்டி மணல் குவாரிகளை சரக்குந்து குவாரிகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவையே தேவையில்லை எனும் போது கூடுதல் புதிய குவாரிகள் எதற்கு.

மணலுக்கு ஏராளமான மாற்று வழிகள் உள்ளன. ஆனால், இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் காக்க மாற்று வழிகள் இல்லை. எனவே, சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் புதிய மணல் குவாரிகள் திறப்பை கைவிட வேண்டும்; பழைய மணல் குவாரிகளையும் மூட அரசு முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in