

மவுலிவாக்கத்தில் இருந்த 11 மாடிக் கட்டிடம் வெற்றிகரமாக வெடி வைத்து தகர்க்கப்பட்டது. 4 விநாடிகளுக்குள் கட்டிடம் சீட்டுக்கட்டு சரிவதுபோல இடிந்து சரிந்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக பீதியில் இருந்த அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் தலா 11 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி வந்தது. இதில், ‘பிளாக் பி’ என்ற 11 மாடி கட்டிடம், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திடீரென இடிந்து தரைமட்டமானது.
அந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். அதன் அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடமும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அதை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, அந்தக் கட்டிடம் 2-ம் தேதி (நேற்று) இடிக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திட்டமிட்ட படி, கட்டிட இடிப்புப் பணிகள் நேற்று காலை தொடங்கின. 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டிடங்கள், வீடுகளில் வசிப்பவர் கள் வெளியேற்றப்பட்டு, மதனந்த புரத்தில் உள்ள திருமண மண்டபத் தில் தங்கவைக்கப்பட்டனர். அப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன.
போரூர் - குன்றத்தூர் சாலை, மவுலிவாக்கம், கெருகம்பாக்கம், மதனந்தபுரம், மாதா நகர், அம்மன் நகர், பெல் நகர், காமாட்சி நகர், ராஜலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதியம் 12 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் போரூர் - குன்றத்தூர் சாலையில் வாகனப் போக்குவரத்து குறைக்கப்பட்டது. அரசுப் பேருந்துகள், சிறிய ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மதியம் 1 மணி முதல் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி, சிஎம்டிஏ உயர் அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கட்டிட இடிப்புப் பணியைக் கண்காணித்தனர். கட்டிடம் இடிக்கப்படுவதைப் பார்ப்பதற்காக பொதுமக்கள், அப்பகுதியில் 100 மீட்டருக்கு அப்பால் உள்ள கட்டிடங்களின் மீது மதியம் முதலே காத்திருந்தனர்.
காலதாமதம் ஏன்?
மதியம் 2 முதல் 4 மணிக்குள்ளாக கட்டிடத்தை இடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, கட்டிடத்தின் தரை தளம், முதலாவது தளம் மற்றும் 5-வது தளத்தில் உள்ள 54 தூண்களில் வெடிமருந்துகள் வைக்கப்பட்டன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க ஏற்பாடு செய்தனர். எனினும் திட்டமிட்ட நேரத்தில் கட்டிடம் தகர்க்கப்படவில்லை. மாலை 5 மணிக்குள் கட்டிடம் இடிக்கப்படும் என தகவல்கள் பரவின. அந்த நேரத்தில் மவுலிவாக்கத்தில் பரவலாக மழை பெய்ததால், கட்டிடத்தை இடிக்கும் பணி மேலும் தாமதமானது. பகல் நேர வெளிச்சம் மங்கி, இருட்டத் தொடங்கியதால் கட்டிடம் திட்டமிட்டபடி இடிக்கப்படுமா என்ற ஐயம் பரவலாக எழுந்தது.
இந்தச் சூழலில் கட்டிடத்தை இடிப்பதற்கான கவுன்ட்டவுன் மாலை 6.52 மணிக்கு தொடங்கியது. முதலில் 5-வது மாடியில் இருந்த வெடிப் பொருட்கள் வெடித்தன. பின்னர் முதல்தளம் மற்றும் அதற்கடுத்து தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் வெடிக்கச் செய்யப்பட்டன. 4 விநாடிகளுக்குள் 11 மாடிக் கட்டிடமும் சீட்டுக்கட்டு சரிவது போல முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. அப்போது அங்கு கடும் புகைமண்டலம் ஏற்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தபோது அப்பகுதியில் லேசான அதிர்வு உணரப்பட்டது.
மக்கள் ஆரவாரம்
கட்டிடம் பாதுகாப்பாக இடிக் கப்பட்டதைக் கண்டு அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று காலை முதலே மவுலிவாக்கத்தில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அப்பகுதியில் மின்விநியோகம் சீரடைந்தது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் இரவு 8 மணிக்குமேல் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கினர்.
கடந்த 2 ஆண்டுகளாக கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்த அப்பகுதி மக்கள், கட்டிடம் பத்திரமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.
தமிழக்தில் இதேபோல ஏற்கெனவே சில கட்டிடங்கள் வெடிபொருட்கள் உதவியுடன் தகர்க்கப்பட்டுள்ளன. எனினும் 11 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் தமிழகத்தில் தகர்க்கப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.