தாய்மொழி சார்ந்த எழுத்தறிவு திட்டத்துக்காக கலிங்கா சமூக அறிவியல் நிறுவனத்துக்கு யுனெஸ்கோ விருது
சென்னை: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் நிறுவனத்துக்கு (KISS), அதன் சிறப்பான தாய்மொழி சார்ந்த எழுத்தறிவு திட்டத்துக்காக யுனெஸ்கோவின் மதிப்பு வாய்ந்த மன்னர் செஜாங் எழுத்தறிவு விருது 2022 வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உள்ளூர் மக்களுக்கு கல்வியை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம், அச்யுதா சமந்தா என்பவரால் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 1992-93-ல் தொடங்கப்பட்டது.
இங்கு முற்றிலும் இலவச கல்வி, ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு, விளையாட்டு பயிற்சி ஆகியவை தங்கும் வசதி கொண்ட பள்ளியில் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு உயர் கல்வியும் கிஸ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. இது உள்ளூர் மாணவர்கள் மட்டுமே படிக்கும் உலகின் முதல் பல்கலைக்கழகமாகும். கிஸ் மூலம் இதுவரை 70 ஆயிரம் உள்ளூர் மாணவர்கள் மேம்பாடு அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கலிங்கா நிறுவனத்துக்கு, தாய் மொழி சார்ந்த பன்மொழிக் கல்வி திட்டத்துக்காக, கொரியா அரசாங்கத்தால் வழங்கப்படும் யுனெஸ்கோ மன்னர் செஜாங் எழுத்தறிவு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் நாட்டின் 5-வது மற்றும் ஒடிசாவின் முதல் கல்வி நிறுவனம் கிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச எழுத்தறிவு நாளை ஒட்டி கோட் டி ஐவரியில் செப்.8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இவ்விருதில் ரூ.16 லட்சம் ரொக்கம், பதக்கம், பட்டயம் ஆகியவை அடங்கும்.
விருது பெற்றது குறித்து கிஸ் நிறுவனர் அச்யுதா சமந்தா கூறும்போது, “கல்வி, எழுத்தறிவு வழங்கும் எங்கள் முயற்சிகள், சமூக கண்டுபிடிப்புகளை யுனெஸ்கோ அங்கீகரித்ததற்காக நன்றி கூறுகிறேன்.
எனது குழந்தைப் பருவத்தில் சரியான கல்வியைப் பெற நான் போராடினேன். எனவே இப்போது கோடிக்கணக்கானோருக்கு முழுமையான கல்வியை வழங்க எனது முழு வாழ்க்கையையும், ஆன்மாவையும் அர்ப்பணித்துள்ளேன்” என்றார்.
