

கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் தாமிரம் விலை அதிகரித்துள்ளதாகவும், மாசு இல்லாமல் அதே தொழிற்சாலையை மீண்டும் இயக்க தங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளதாகவும், ‘மேக்’ இந்தியா நிறுவனத்தின் தலைவரும், மனுநீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான மாணிக்கம் தெரிவித்தார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டதால் தாமிரம் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 2018-ல் இந்தியா தாமிரம் ஏற்றுமதி செய்து வந்தது. இன்று 6 லட்சம் டன் தாமிரம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு தாமிரம் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது ரூ.750-ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. இதனால் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.
மூலப்பொருள் விலை ஏற்றத்தால், கோவை மாவட்டத்தில் 3,000 தொழில் நிறுவனங்கள் உட்பட நாடு முழுவதும் 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு கோடிபேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
தாமிரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. காற்றாலை, சூரியஒளி மின்உற்பத்தி, மின்சார வாகனம் உற்பத்திக்கு தாமிரம் மிக மிக அவசியம். பாதுகாப்புதுறை மிக அதிக அளவில் ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய உள்ளது. இதற்கும் தாமிரம் அவசியம்.
போர் காலங்களில் இதுபோன்ற முக்கிய மூலப்பொருளுக்கு பிற நாடுகளை நம்பி இருக்கக் கூடாது. தாமிர நிறுவனம் செயல்பட தொடங்கினால் தாமிர உற்பத்தி செய்ய நான்கு ஆண்டுகள் ஆகும்.
எல்லாவித மாசுவுக்கும் தீர்வு
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவின்படி நாங்கள் எல்லாவிதமான மாசுவுக்கும் தீர்வு கண்டுபிடித்துள்ளோம். தாமிரம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் எந்த நிறுவனமும் மாசு பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்படக் கூடாது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசு இல்லாமல் தாமிரம் தயாரிக்க முடியும். எனவே, ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் நாட்டிலுள்ள தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி எதிர்வரும் நாட்களில் தாமிர உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து நம் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.