

பல்லடம் அருகே முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி 10 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடாங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரிகள் மீதான பல்வேறு புகார்களை விவசாயிகள் எழுப்பி வருகின்றனர்.
விதிமீறல் தொடர்பாக ஒரு கல்குவாரிக்கான உரிமத்தை, கடந்த வாரம் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் சு.வினீத் ரத்து செய்தார்.
மேலும், அதே பகுதியில் செயல்படும் 2 குவாரிகளின் விதிமீறல்களை கண்டித்து, கடந்த10 நாட்களாக விவசாயி செந்தில்குமார் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவரது போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், அவரின் மனைவி கலைச்செல்வி தலைமையில் 10 பெண்கள், ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் பகுதியில் அமர்ந்து நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “கல்குவாரியில் இருந்து 150மீட்டருக்குள் வீடு, தொழிற்சாலைகளும், 250 மீட்டருக்குள் அரசின் தொகுப்பு வீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளும் உள்ளன. இவை அனைத்தையும் மறைத்து, போலி ஆவணங்கள் மூலமாக ஓடையை ஆக்கிரமித்து குவாரி செயல்பட்டு வருகிறது" என்றனர்.
பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் முறைகேடாக இயங்கும் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யவலியுறுத்தி, தமிழக விவசாயிகள்பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, நொய்யல் ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.திருஞான சம்பந்தன் ஆகியோர் முன்னிலையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, குவாரி உரிமையாளர்களால் கரூரில் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாநகரக் காவல் உதவி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய 10 பெண்கள் மற்றும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்த 25 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
அங்கு போலீஸார் வழங்கிய மதிய உணவை புறக்கணித்து, உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி செய்தியாளர்களிடம் கூறும் போது, "விவசாயிகளின் உணர்வை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை.
கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்" என்றார்.