

''முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி ஸ்டாலின் அரசியல் நாகரிகமில்லாமல் பேசி வருகிறார்'' என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் செய்தார்.
ஐராவதநல்லூரில் சரத்குமார் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய அறிக்கையை வெளியிட்டு தேர்தல் பணியாற்ற கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள், கட்சியினரின் பிரார்த்தனையால் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அதனால், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சர்ச்சை எழுப்பி, அரசியல் லாபம் அடைய நினைத்த திமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2017-ம் ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா புதிய உத்வேகத்துடன் தமிழகத்தை வழிநடத்தப் போகிறார். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நலத்திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார். கல்வி, சுகாதாரம், தொழில்துறைகளில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. சிறு குறு விவசாயிகள் பயிர்க்கடனை ரத்து செய்துள்ளார். சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாததையும் முதல்வர் ஜெயலலிதா செய்துள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியே மட்டுமே அரசியல் செய்கிறார். சட்டப் பேரவையில் கூட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே அவர் வெளியே சென்றுவிடுகிறார். அரவக்குறிச்சியில் ஸ்டாலின் பேசும்போது, காவிரி பிரச்சி னைக்கு முற்றுப்புள்ளி வைத் தவர் கருணாநிதி என பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ள்ளார். அவருக்கு எதை பேச வேண்டும் என்பதே தெரியவில்லை. முன்பு முதல்வரை காணொலி மூலம் ஆட்சி செய்கிறார் என்றார். தற்போது காணாமல்போய் ஆட்சி செய்கிறார் என்கிறார். ஸ்டாலின் அரசியல் நாகரிகம் இல்லாமல் முதல்வரை பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். இவ்வாறு சரத்குமார் பேசினார்.
செல்போன் பிரியர்களே…
சரத்குமார் பேச ஆரம்பித்தபோது, அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரது பேச்சை கேட்காமல் செல்போனில் வாட்ஸ் அப் பார்ப்பதும், பொழுதுபோக்குவதுமாக இருந்தனர். இதை பார்த்த சரத்குமார், அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லிக்கொண்டு வரும்போது, இறுதியில் வாக்காளர்களே, பத்திரிகையாளர்களே செல்போன் பிரியர்களே என்றார். அவர் இவ்வாறு சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பேசுகையில், “சரத்குமார் வந்தார், 25 வயது இளைஞர் போன்று இருந்தார் என்று, எனது நடை, உடை, பாவனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யுங்கள்” என்றார்.