

தாம்பரம்: பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் ஒரு பகுதி மட்டும் விரைவில் திறக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இதனை தொடர்ந்து இதற்காக, 2000-ம் ஆண்டு, ரூ.76 கோடி ஒதுக்கீடு செய்ய நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் வழங்கியது. ஆனால், பணிகள் நடக்கவில்லை. இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழில் பல முறை செய்தி வெளியானது. அரசியல் கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் 2020-ம் ஆண்டு ரூ.234.37 கோடி திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த பணியில் ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமாக கட்டப்பட்டு வந்த ஒருவழிப்பாதை மேம்பால பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் இந்த பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மேம்பாலம் திறந்தால் செங்கல்பட்டில் இருந்து வரும் கனரக வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் மேம்பாலத்தில் ஏறி செல்லலாம். இதனால், நெரிசல் ஓரளவு குறையும். அதேநேரத்தில், புது பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை மார்க்கமாக பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து மேம்பால பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அப்பகுதிகளிலும் பணிகள் முடிந்து மேம்பாலம் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே பெருங்களத்தூர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.