

சென்னை: நேர்மை, ஒழுக்கம் மற்றும் கண்ணியமிக்கவர்களை மட்டுமே தமிழக காவல்துறையின் சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிக்க வேண்டுமென தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக காவல்துறையின் ஆயுதப்படைப் பிரிவில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றும் முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் தங்களை சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது காவல்துறை தரப்பில், மனுதாரர்கள் 40 வயதைக் கடந்து விட்டதாலும், துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்டம்–ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற இயலாது, என வாதிடப்பட்டது.
மாமூல் குற்றச்சாட்டு
அதையடுத்து இந்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “சமூகத்துடன் நேரடி தொடர்பில் உள்ள காவல்துறையின் சட்டம்–ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு நேர்மை, ஒழுக்கம், கண்ணியம் மிகவும் முக்கியம். சட்டம்–ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் போலீஸார் காவல் நிலையத்திலேயே பகிரங்கமாக மாமூல் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சட்டம்–ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது உயரதிகாரிகளின் பொறுப்பு.
சமீபகாலமாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது குறைந்து, குற்ற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களையும் மட்டுமே தமிழக காவல்துறையின் சட்டம்–ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளார்.