ரூ.20-க்கு மருத்துவம் பார்த்த மக்களின் மருத்துவர்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ரூ.20-க்கு மருத்துவம் பார்த்த மக்களின் மருத்துவர்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Updated on
1 min read

பொருளாதாரம் உள்ளவர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியும் என்ற சூழலில், வெறும் 20 ரூபாய் இருந்தால் போதும் என்னிடம் மருத்துவம் பார்க்கலாம் என மனிதநேயத்தோடும் மருத்துவம் பார்த்தவர் கோவையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில், அவரால் பயனடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது கோவை நகரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கோவை சிங்காநல்லூர் ராஜ கணபதி நகரைச் சேர்ந்தவர் மருத் துவர் வி.பாலசுப்பிரமணியன் (67). ஆவாரம்பாளையம் சாலையில் சிறிய அறை ஒன்றில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் 2 ரூபாயை மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை வழங்கி வந்தார். பணம் இல்லாதவர்களிடம் அதைக் கூட வாங்கமாட்டார்.

பொருளாதாரச் சூழலால் கடந்த சில ஆண்டுகளாக தனது கட்டணத்தை 2 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தி மருத்துவ சேவையைத் தொடர்ந்து செய்து வந்தார்.

இதனால் பயனடைந்த ஆவாரம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி ஏழை, எளிய மக்கள், அவரை 2 ரூபாய் டாக்டர் என்றும் 20 ரூபாய் டாக்டர் என்றும் அன்புடன் அழைத்து வந்தனர். விடுப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்தவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பலர், மருத்துவர் பாலசுப்பிரமணியனின் உடலுக்கும், அவரது மருத்துவமனை முன்பும் கடந்த 2 நாட்களாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று அவரது உடல் ஒண்டிப்புதூர் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது நடந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் கூறும்போது, ‘நோயாளிகள் மருந்து வாங்கும் செலவைக் கூட குறைக்க வேண்டும் என்பதற்காக, தன்னிடமிருக்கும் மருந்துகளையே பெரும்பாலும் வழங்குவார். இதனால் பாலசுப்பிரமணியத்தை தேடி வருவோர் ஏராளம். இங்குள்ள பல குழந்தைகளுக்கு பெயர் வைத்தவர் கூட இந்த மருத்துவர்தான். அந்த அளவுக்கு எங்களில் ஒருவராக இருந்தவரை இன்று இழந்துவிட்டோம்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in