

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்தி சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்துவதற்கான அவகாசம் நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
மத்திய அரசு பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளின் வரிகளை செலுத்தலாம் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் சொத்துவரி, தொழில்வரி, மற்றும் இதர வரிகளை, பொதுமக்கள் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களாக செலுத்த 446 சிறப்பு முகாம்கள் கடந்த 13-ம் தேதி திறக்கப்பட்டன. இந்த முகாம்கள் 2 நாட்கள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை வரும் நவம்பர் 24-ம் தேதி வரை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கலாம் என்று அறிவித்துள்ளது. அதனால் சிறப்பு முகாம்களின் சேவை, வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த நாட்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வரிகளை செலுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரூ.22 கோடி வசூல்
இந்த 446 முகாம்களிலும் முதல் நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம், 2-வது நாளில் ரூ.14 கோடியே 83 லட்சம் என கடந்த இரு நாட்களில் மட்டும் ரூ.22 கோடியே 4 ஆயிரம் வசூலாகியுள்ளது.