Published : 07 Nov 2016 08:37 AM
Last Updated : 07 Nov 2016 08:37 AM

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கிறது

அமைச்சர்கள், கட்சிகளின் நிர்வாகிகள் தீவிரம்



தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்க உள்ளது. வாக்குப் பதிவுக்கு 2 வாரங்கள்கூட இல்லாத நிலையில், 3 தொகுதிகளிலும் பிரச் சாரம் சூடுபிடித்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

பணப் பட்டுவாடா புகார் காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த மே மாதம் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதிமுக உறுப்பினர் சீனிவேல் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 3 தொகுதி தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிக்கை கடந்த 26-ம் தேதி வெளியானதும், மேற்கண்ட 3 தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வேட்புமனு தாக்கலும் அன்றே தொடங்கி கடந்த 2-ம் தேதி முடிந்தது. 3 தொகுதிகளிலும் 139 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை 3-ம் தேதி நடந்தது. மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5-ம் தேதி முடிவடைந்ததை அடுத்து, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ரெங்கசாமி, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி உட்பட 14 பேரும், அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி உட்பட 39 பேரும், திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், திமுக வேட்பாளர் ப.சரவணன் உட்பட 28 பேரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் கூட இல்லாததால், 3 தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உட்பட பல அமைச்சர்களும் திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை தலைமையில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். தஞ்சாவூர் தொகுதியில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், வேலுமணி, காமராஜ் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் அவர் 10, 11 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தஞ்சாவூர் தொகுதியில் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்கிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் 10, 11 தேதிகளிலும், அரவக்குறிச்சி தொகுதியில் 13, 14 தேதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார். திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி.யும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

3 தொகுதி தேமுதிக வேட்பாளர் களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் 12-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார். மகளிர் அணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அரவக்குறிச்சியில் நேற்று பிரச்சாரம் தொடங்கினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாததால், அங்கு போட்டியிடவில்லை என பாமக அறிவித்துள்ளது. மற்ற 2 தொகுதிகளிலும் பாமக வேட் பாளர்களை ஆதரித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் 13, 14 தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தஞ்சாவூர் தொகுதியில் 9-ம் தேதி பிரச்சாரம் செய்கிறார். பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் 3 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சிகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெயலலிதா, கருணாநிதி பிரச்சாரம் இல்லை

முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக தலைவர் கருணாநிதியும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் உள்ளார். இதனால், இந்த 2 முக்கிய தலைவர்களும் பிரச்சாரத்தில் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் பிரச்சாரம் இல்லாமல் இந்த 3 தொகுதி தேர்தல் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x