Published : 19 Nov 2016 02:43 PM
Last Updated : 19 Nov 2016 02:43 PM

வனதேவதையை அழைக்க பாரம்பரிய வாத்தியங்களை இசைக்கும் கொடைக்கானல் மலைவாழ் மக்கள்

வனதேவதையை அழைக்க, பாரம்பரிய வாத்தியங்களை இசைக்கும் வழக்கத்தை நூறாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகின்றனர் கொடைக்கானல் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையான கொடைக்கானல் கீழ்மலை பகு தியில் உள்ளது வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட கருவேலம்பட்டி. இங்கு ஆதிவாசிகளான பளியர் இனத்தவர் வசித்து வருகின்றனர். வெளித்தொடர்பு அதிகமாக இல்லாத உள்காட்டு பகுதியில் வசிக்கும் இம்மக்கள், முன்னோர் விட்டுச்சென்ற பழக்கவழக்கங்களை இன்றும் தொடர்கின்றனர். இதில் ஒன்று மலைவாழ் மக்களுக்கென்று உள்ள வாத்தியக் கருவிகள். ஆதிதாளம், குழல் என அதிகளவில் இந்த இரண்டு வாத்தியங்களை பயன்படுத்துகின்றனர்.

குமிழ் மரத்தை குடைந்து ஆதிதாளத்துக்கான உருளையான பகுதியை அவர்களே உருவாக்கி கொள்கின்றனர். ஆட்டின் தோலை பக்குவப்படுத்தி இரண்டுபுறமும் வைத்துக் கட்டி இசைக் கருவியை உருவாக்குகின்றனர். இதில் குறிப்பிட்ட இசை வரும்படி ஆட்டின் தோலை கட்டுகின்றனர். மற்றொரு இசைக்கருவி குழல். நாதஸ்வரம் போல் சிறியதாகவும், சிறுவர்கள் வைத்திருக்கும் பீப்பி போலவும் இந்த வாத்தியக் கருவி உள்ளது. இதையும் இவர்களே செய்கின்றனர். இந்த வாத்தியங்களை இசைக்க குழுவின் தலைவர் ஒருவர் உள்ளார். அவரே இளையவர்களுக்கும் மலை வாத்தியங்களை இசைக்க கற்பிக்கிறார்.

முதன்முதலில், இவர்கள் இசைக் கருவியை இசைப்பது, தங்கள் வனதேவதையை அழைப்பதற்குத்தான். திருவிழா காலங்களில் மட்டுமல்ல விசேஷங்கள், துக்க நிகழ்ச்சிகள் என அனைத்திலும் வனதேவதையை அழைக்கும் இசையை இசைத்துவிட்டுத் தான் நிகழ்ச்சியைத் தொடங்குகின்றனர்.

இசைக் குழுவின் தலைவரான முத்துச்சாமி (65) கூறியதாவது:

எங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து மலைக்குள்ளேயே தான் வசித்து வந்துள்ளனர். நானும் பிறந்தது முதலே, இந்த மலைக்காட்டில் தான் வசிக்கிறேன். எங்கள் முன்னோர் கற்றுக்கொடுத்ததுதான் இந்த இசை. இசைக்கருவியை செய்யவும் அவர்களிடமே கற்றோம். எங்கள் குலதெய்வமான வனதேவதையை அழைப்பது முக்கியமானது. விழாக் காலங்களிலும், குறி பார்க்கத் தொ டங்கும் முன்பும் வனதேவதையை அழைக்க, இசைக்கருவிகள் மூலம் தனி இசையை எழுப்புவோம். இசையின் ராகம், தாளம் எல்லாம் தெரியாது. பழக்கத்தில் வந்தது தான் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x