

நீதிபதிகள் வரம்பு மீறி செயல்படக் கூடாது என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவே ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டு வரப்பட் டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டு விட்டது. குளிர்கால கூட்டத் தொடரில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு மீதான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதி பேசிய வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றை எதிர்க்கிறேன்.
மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நீதிபதிகளின் சொல்லாடல் இருக்கக் கூடாது. நீதிபதிகள் வரம்புகளை மீறி செயல்படக் கூடாது. ஒரு காலத்தில் திருமணங்கள், பொது நிகழ்ச்சிகளில் நீதிபதிகள் பங்கேற்க மாட்டார்கள். ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டது. நீதித் துறையில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றார்.