

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 3 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57ஆக உயர உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. ஏற்கெனவே காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு 30 பேர் கொண்ட பட்டியலை சென்னை உயர் நீதி மன்ற கொலீஜியம் உச்ச நீதிமன்றத் திற்குப் பரிந்துரை செய்திருந்தது. இதில் 24 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் சட்ட ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரைத்தது. அதன்படி அந்தப் பட்டியலில் முதற்கட்டமாக கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 பேர் நீதிபதிகளாக நியமிக்கப் பட்டனர். இதனால் தற்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் 54 நீதிபதிகள் பதவி வகித்து வருகின்றனர். எஞ்சிய காலிப்பணியிடங்களையும் விரைவாக பூர்த்தி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி யாக பதவி வகித்து வரும் எஸ்.என்.சேஷசாயி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாள ராக உள்ள என்.சதீஷ்குமார், தமிழ்நாடு மாநில சட்டப்பணி கள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரான ஆர்.எம்.டி.டீக்கா ராமன் ஆகிய 3 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் காரணமாக இவர்களது கையெழுத்தை சம்பிரதாய முறைப்படி இந்தி தேவநாகரி வடிவில் கையெழுத்திடும் கோப்பு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதில் 3 பேரும் கையெழுத்திட்டனர். விரைவில் மத்திய அரசு சார்பில் இவர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளிவந்தபிறகு பதவிப் பிரமாணம் நடைபெறும். இதன்மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 லிருந்து 57 ஆக உயர்வதுடன், காலியிடங்களின் எண்ணிக்கையும் 18ஆக குறையும்.