

சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் கிருஷ்ணா நதி நீர் திறக் கப்பட்டுள்ளது. இது தமிழக எல் லைக்கு வரும் 14-ம் தேதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர அரசு திறந்து விடுவது வழக்கம். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீரை அணையில் இருந்து திறந்து விடவில்லை. அதேநேரம், கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ததால் கிருஷ்ணா நதி நீரின் தேவையும் பெரிதாக இல்லாமல் போனது.
நடப்பாண்டு ஆந்திர அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் முதல் கட்டமாக ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு திறக்கவில்லை. இந்நிலையில் ஆந்திராவில் பெய்த மழையால் சைலம் மற்றும் சோமசீலா அணை, கண்டலேறு அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தது.
இதையடுத்து, சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட தமிழக பொதுப் பணித்துறை கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று கடந்த மாதம் 10-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர அரசு தண்ணீர் திறந்து விட்டது.
கண்டலேறு அணையில் இருந்து, தொடக்கத்தில் வினாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த 6-ம் தேதி வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. கடந்த மாதம் 18-ம் தேதி மாலை தமிழக எல்லையான ஜீரோ பாயிண் டுக்கு வந்த நீர், பூண்டி ஏரிக்கு 20-ம் தேதி காலை வந்தடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவும் வந்த நீரின் அளவும் மிக குறைந்த அளவில் இருந்தது. ஆந்திர பகுதிகளில், கிருஷ்ணா கால்வால் இருந்து, மோட்டார் மூலம் ஆந்திர விவசாயிகள் சட்ட விரோதமாக நீரை உறிஞ்சி விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்ததுதான் காரணம் என தெரிய வந்தது.
இதையடுத்து, நீரை உறிஞ்சு வதை தடுக்கும் வகையில் கண்ட லேறு அணையில் இருந்து நீரை திறந்துவிடுவதை கடந்த 7-ம் தேதி தற்காலிகமாக ஆந்திர அரசு நிறுத்தியது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆகவே, குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் கிருஷ்ணா நதி நீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, கடந்த 9-ம் தேதி காலை, கண்டலேறு அணை யில் இருந்து மீண்டும் கிருஷ்ணா கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. அந்த நீர் நேற்று முன்தினம் காலை வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பின்னர் மாலையில் 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
கண்டலேறு அணையில் இருந்து 152 கிமீ தூரமுள்ள தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தில் உள்ள ஜூரோ பாயிண்டுக்கு வரும் 14-ம் தேதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று காலை 6 மணி நிலவரப்படி 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 167 மில்லியன் கன அடியாக உள்ளது. இதில், சென்னையின் குடிநீர் தேவைக்காக இணைப்புக் கால்வாய் மற்றும் பேபி கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 175 கனஅடி நீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.