

பொருட்களுக்கு ரசீது வழங்குதல், பாயின்ட் ஆஃப் சேல் இயந்திர பதிவு, ஆதார் இணைப்பு ஆகியவற்றுடன் குடும்ப அட்டை உறுப்பினர்களின் எண்ணிக்கை சேகரித்தல் என பல பணிகளை செய்வதால் பணியில் குழப்பம், தொய்வு ஏற்படுவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 386 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இக்குடும்ப அட்டைகளுக்கு உணவு மற்றும் கூட்டுறவுத் துறைகளால் நடத்தப்படும் 34 ஆயிரத்து 686 நியாயவிலைக் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகள் கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியானதால் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. இவற்றுக்குப் பதில் மின்னணு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. பொது விநியோகத் திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்காக விற்பனை முனைய இயந்திரம் (பாயின்ட் ஆப் சேல்) கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், குடும்ப அட்டைவிவரங்கள், ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை தற்போது நியாய விலைக் கடை ஊழியர்களே செய்து வருகின்றனர். இதற்கிடையில், சமீபத்தில் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருப்பவர்கள் விவரம் சேகரிக்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால், கடை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது:
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பலரிடமும் ஆதார் அட்டை இல்லை. தற்போது வரை கைபேசி எண்ணை கொடுக்க பலரும் தயங்குகின்றனர். அவர் களுக்கு திட்டத்தின் விவரங்களை புரிய வைக்க வேண்டியுள்ளது. கடையில் பொருள் விநியோகம், பில் போடுதல், இருப்பு ஆகிய வற்றை பதிவு செய்தல், விவரங் களை அனுப்புதல், குடும்ப அட்டை தாரர்கள் விவரங்கள், ஆதார் ஆகியவற்றை பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரத்தில் பதிவு செய்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறோம்.
இந்நிலையில் தற்போது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்குமாறு கூறியுள்ளனர். இதற்கான படிவத்தில், விவரங் களை கேட்டு பதிவு செய்து, குடும்பத் தலைவரிடம் கையொப் பம் பெற வேண்டும். இதை இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண் டும் என்பதால் எதை முதலில் செய் வது என்பது குழப்பமாக உள்ளது. பணிகளும் தடைபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தவிர குடும்ப அட்டை யில் இறந்தவர்கள் பெயர்களை நீக்காதவர்கள் மற்றும் புதிய பெயர் களை சேர்க்காதவர்களையும் கண்டறிந்து அதற்கான நட வடிக்கை எடுக்கவும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்டுள் ளனர்.
இது தொடர்பாக கடை ஊழியர் மேலும் கூறும்போது, “குடும்ப அட்டைதாரர்களிடம் விவரம் கோரும்போது இறந்தவர்கள் பெயரை நீக்க அறிவுறுத்துகிறோம். அதே நேரம் 5 வயதுக்கு உட்பட்ட வர்களின் பெயர்கள் சேர்க்கப் படாவிட்டால், குழந்தையின் பிறப்பு சான்றிதழை கேட்டு பெற்று அதை பாயின்ட் ஆஃப் சேல் இயந்திரத்தில் பதிவு செய்கிறோம். பெயரை சேர்க்கவும் அறிவுறுத்துகிறோம்’’ என்றார்.
ஸ்மார்ட் கார்டு எப்போது?
நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் விவரத் தொகுப்பு பணிகள் இன்னும் முடியவில்லை. ஆதார் விவரங்களை அளிக்காதவர்கள் எண்ணிக்கையே கோடிக்கணக்கில் இருக்கிறது. இதனால் ஸ்மார்ட் கார்டை எப்போது வழங்குவது என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என உணவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில்தான் குடும்ப உறுப்பினர்கள் விவரங் கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிந்து விடும். ஆனால், ஸ்மார்ட் கார்டை எப்போது கொடுப்பது என்பதை அரசுதான் முடிவெடுக்கும்.
தற்போது அனைத்து விவரங் களையும் கொடுத்தவர்களுக்கு முதலில் அட்டை வழங்கலாம். அல்லது அனைவரும் விவரங் களை கொடுத்த பின்அட்டை வழங்கலாம் முதலில் ஒருவருக்கு வழங்கி விட்டால் பொதுமக்களிடம் நம்பிக்கை, ஆர்வம் அதிகரிக்கும். அவர்களாகவே வந்து விவரங்களை அளிப்பார்கள்” என்றார்.