உலகத்தரப் பல்கலை.யால் தமிழகப் பல்கலை. மாணவர் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படக் கூடாது: வாசன்

உலகத்தரப் பல்கலை.யால் தமிழகப் பல்கலை. மாணவர் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படக் கூடாது: வாசன்
Updated on
1 min read

மத்திய அரசு உலகத்தரப் பல்கலைக்கழகங்களை உருவாக்கும்போது தமிழகப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் உலகத்தரப் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு மத்திய பாஜக அரசு பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது. இதன் மூலம் அரசுத் துறையில் 10 கல்வி நிறுவனங்களையும், தனியார் துறையில் 10 கல்வி நிறுவனங்களையும் உலகத்தரப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அப்பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்படுவதற்காக கோடிக்கணக்கில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது.

ஆனால் மத்திய பாஜக அரசின் இந்த முயற்சியால் உலகத்தரப் பல்கலைக்கழகங்கள் அமையும் போது தமிழகப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கான மாணவ, மாணவிகளின் இட ஒதுக்கீட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சதவீதம் குறையும்.

குறிப்பாக தமிழத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு 69 சதவீதம். ஆனால் தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஏதேனும் உலகத்தரப் பல்கலைக்கழகமாக மாறினால் மைய அரசின் கொள்கைப்படி அங்கு இட ஒதுக்கீடு என்பது 49.5 சதவீதம் என்ற நிலைக்கு குறையும்.

இதனால் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டில் சுமார் 20 சதவீதம் பறிபோகும் நிலை ஏற்படும். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு இட ஒதுக்கீட்டின் சதவீதம் குறையும் போது பெருமளவு பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களே என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இம்முறை நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் நலிந்த பிரிவினருக்கு உயர்கல்வியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் குறையும்.

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தவர் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறைகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்படும். இந்த முயற்சி பாஜக அரசு இட ஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகும்.

மத்திய பாஜக அரசு உலகத்தரப் பல்கலைக்கழகமாக மாற்ற நினைத்தால், இட ஒதுக்கீட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சதவீத முறையைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் தரம் உயர்த்த ஒதுக்கப்படும் 5 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்கி உயர் கல்வி நிலையங்களை மேம்படுத்தி, அவற்றை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயக்க முழு அதிகாரம் வழங்க வேண்டும். இதனால் கல்வி நிலையங்களின் தரம் உயருவதோடு, இட ஒதுக்கீடும் முறையாகப் பின்பற்றப்படும்.

எனவே மத்திய பாஜக அரசு உலகத்தரப் பல்கலைக்கழகங்களை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சியில் தமிழக மக்கள் நலன் கருதி தமிழகப் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே கடைபிடிக்க முன்வர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in