Published : 15 Sep 2022 07:25 PM
Last Updated : 15 Sep 2022 07:25 PM

அம்மா உணவகம் இல்லை: சென்னையில் 6 தனி சமையல் கூடங்கள் மூலம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி

சென்னை: சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நான்கு மண்டலங்களில் துவங்குகிறது. இதற்காக, ஆறு இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு துவங்கியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை கீழ் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள, 37 பள்ளிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் துவங்கப்படுகிறது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 5,941 மாணவர்கள் பயனடைய உள்ளனர்.

இதற்காக, 6 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை மாகநராட்சி ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, எண்ணுாரில் இரண்டு இடங்கள், மாதவரம், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய ஆறு இடங்களில் ஒருங்கிணைந்த சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: "மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. ஆனால், அதற்கான இடவசதி குறைவாக உள்ளது. மேலும் வழக்கமான அம்மா உணவக சேவையும் பாதிக்கப்படும் என்பதால், மாற்று இடத்தில் உணவு தயாரிக்கப்படுகிறது.

இந்த உணவுகளை பள்ளி மாணவர்களுக்கு காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கு, சாப்பிடுவதற்கான தட்டு, டம்ளர் ஆகியவை வாங்கப்பட்டுள்ளது. சமையல்காரர்கள், உணவு டெலிவரி செய்பவர்கள், அவற்றை பெற்று மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x