Last Updated : 15 Sep, 2022 04:51 PM

 

Published : 15 Sep 2022 04:51 PM
Last Updated : 15 Sep 2022 04:51 PM

காரைக்கால் மாணவரின் குடும்பத்துக்கு விரைவில் நிவாரண நிதி, அரசு பணி: புதுச்சேரி அரசு

புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் | கோப்புப் படம்.

புதுச்சேரி: சக மாணவியின் தாய் தந்த விஷம் கலந்த குளிர்பானத்தால் இறந்த காரைக்கால் மாணவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் தர புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்துள்ளதாக அம்மாநில பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார்.

புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமணிகண்டன். 8ம் வகுப்பு படிக்கும் பாலமணிகண்டன் வகுப்பிலும், போட்டிகளிலும் முதலிடம் பிடித்து வந்தார். இதனால் சக மாணவியின் தாயார் சகாயராணி எலிபேஸ்ட் கலந்த குளிர்பானத்தை வாட்ச்மேனிடம் கொடுத்தனுப்பினார். இதை அருந்திய பாலமணிகண்டன் மயங்கி விழுந்ததால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து சகாயராணி கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவருக்கு சிகிச்சை அளித்ததில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து இரு அரசு டாக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இறந்த பாலமணிகண்டனின் பெற்றோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம் ஆகியோரை சந்தித்தனர். அப்போது குற்றம் புரிந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

இச்சந்திப்பு தொடர்பாக பேரவைத்தலைவர் செல்வம் கூறுகையில், ''மாணவர் இறப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத் தொகை, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தர முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். முதல்வரும் செய்து தருவதாக கூறினார். விரைவில் மாணவரின் குடும்பத்தாருக்கு முதல்வர் நிதி தருவார். அரசு பணி தரவும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் எலி பேஸ்ட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தடை உத்தரவு வெளியாகவுள்ளது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x