Last Updated : 15 Sep, 2022 12:39 PM

 

Published : 15 Sep 2022 12:39 PM
Last Updated : 15 Sep 2022 12:39 PM

விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்

விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர்: விருதுநகரில் 2 லட்சம் சதுர அடியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்.15) அடிக்கல் நாட்டினார்.

மதுரையில் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதைத் தொடங்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் வந்தார். மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர்.

அதைத்தொடர்ந்து விருதுநகர் வரை வழி நெடுகிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சாலை ஓரத்தில் திரண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காளையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய முறைப்படி வழி நெடுகிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுத்தார். அப்போது, பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களைச் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ரூ.70.57 கோடியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் கூடிய புதிதாக ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அரசுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு பணி விளக்க அரங்குகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிதாக கட்டப்பட உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் பாண்டிதேவிக்கு அங்கன்வாடி ஊழியருக்கான பணியாணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாகம்- கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்தாகூர், தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள் வாழ்த்துரையாற்றினர். நிறைவில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x