தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் எச்1என்1 இன்ஃப்ளூவன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். அவருடன் மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார், பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குநர் நாராயண பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், " தமிழகத்தில் 282 குழந்தைகள் H1N1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். வருடா வருடம் பருவ மழைக் காலங்களில் இந்தக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. கோவிட் காலத்தில் இரண்டு வருடமாக முகக்கவசம் அணிதல் தனிமனித இடைவெளியை சரியாக பின்பற்றியதன் காரணமாக இக் காய்ச்சல் தொற்று பரவல் குறைவாக இருந்தது.

ஆனால் தற்போது மக்களிடையே அது குறித்த விழிப்புணர்வு குறைந்துவிட்டதன் காரணமாக பருவமழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல் குழந்தைகளுக்கிடையே பரவி வருகிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு நடத்தினோம். இங்கு 121 குழந்தைகள் காய்ச்சலால் சிகிச்சை பெறுகிறார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 8 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை. பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in