Published : 15 Sep 2022 10:24 AM
Last Updated : 15 Sep 2022 10:24 AM

குழந்தைகளின் பசியைப் போக்கிட எந்த தியாகத்தையும் செய்யத் தயார் - முதல்வர் ஸ்டாலின் 

முதல்வர் ஸ்டாலின்

மதுரை: "தமிழ் சமூகத்தினுடைய வறுமையை அகற்றிட, குழந்தைகளின் பசியைப் போக்கிட எந்த தியாகத்தையும் செய்திட நான் தயாராக இருக்கிறேன்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த விழாவில் முதல்வர் பேசியது: " ஒரு நூர்றாண்டிற்கு பின்னர், இன்று காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்று ஆயிரம்விளக்கில் தொடங்கிய திட்டம், தூங்காநகரமாக இருக்கக்கூடிய மதுரையின் வைகையாற்றங்கரையில் அடுத்த பரிமாணத்தை அடைந்து விரிவடைந்திருக்கிறது. பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் என்பது அமெரிக்காவில் (US Departmet of Agriculture) பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னர், பிரான்ஸ் நாட்டிலும் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால், அந்நாட்டு மாணவர்களின் கற்றல்திறன் அதிகரிப்பதாகவும், மாணவர்களின் வருகை அதிகரிப்பதாகவும், பல ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, காலை உணவுத்திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காலை சிற்றுண்டியை மாணவர்கள் உண்ணும்போது அவர்கள் அடையக்கூடிய மகிழ்ச்சியை அவர்களது முகங்களில் நான் பார்த்தேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை சொற்களால் வருணிக்க முடியாது. ஏழை எளியோர் வீட்டுப் பிள்ளைகள், ஒடுக்கப்பட்டோர் பிள்ளைகள், எதன் காரணமாகவும் பள்ளிக்குச் செல்வது தடைபடக்கூடாது என்பதற்காகவே, திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. அங்குதான் கடந்த நூற்றாண்டுக்கான விதை தூவப்பட்டது.

அதற்காகவே சுயமரியாதை, சமூகநீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி இடஒதுக்கீடு தரப்பட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் வழிகளை நான் பின்பற்றி வருகிறேன். எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும், இந்த பசிச் சுமையை போக்க நாம் முடிவெடுத்து இந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு எத்தனை கனிவோடும், கவனத்தோடும் உணவு வழங்குவீர்களோ, அதைவிட கூடுதல் கவனத்தோடும், கனிவோடும் வழங்க வேண்டும்.

அன்பு மாணவச் செல்வங்களே, உங்களுக்கு காலையும், மதியமும் உணவு வழங்குகிறோம். எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். இது ஒன்றுதான் என்னுடைய வேண்டுகோள். கல்வி நாம் போராடி பெற்ற உரிமை. படிப்பு ஒன்றுதான் நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்தாக அமைந்திருக்கிறது. அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களது மற்ற கவலைகள், மற்ற தேவைகளை நிறைவு செய்வதைத்தான் இந்த அரசு செய்துகொண்டிருக்கிறது. நான் இருக்கிறேன், நீங்கள் படிப்பிலே மட்டும் கவனம் செலுத்துங்கள். படித்துதான் ஆக வேண்டுமா? குறிப்பாக இந்த படிப்பைத்தான் படிக்க வேண்டுமா? வேறு படிப்பே இல்லையா? என்று யாராவது சொன்னால், அவர்களை முட்டாள்களாக பாருங்கள்.

நீங்கள் படித்து அறிவார்ந்த சமூகமாக முன்னேற இருப்பவர்கள். எந்த காரணத்துக்காகவும் கல்வியைவிட்டு விலக சென்றுவிடாதீர்கள். விலகி செல்லவும் நான் விடமாட்டேன். பள்ளிக்கல்வி, உயர் கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகள் என கலை அறிவியல் என அனைத்து துறைகளிலும் நீங்கள் முன்னேற வேண்டும். நீங்கள் முன்னேறினால்தான் நம்முடைய தமிழ்ச்சமுதாயம் இன்னும் முன்னேறும்.

அந்த முன்னேற்றத்திற்காகத்தான், திமுக அரசியல் களத்திலும், ஆட்சிபொறுப்பிலும் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. "பசிப்பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க வாழ்" என்கிறது மணிமேகலை காப்பியம். அத்தகைய மாநிலமாக தமிழ்நாடு அமைய எந்நாளும் உழைப்போம். தமிழ்ச் சமூகத்தினுடைய வறுமையை அகற்றிட, குழந்தைகளின் பசியைப் போக்கிட எந்த தியாகத்தையும் செய்திட நான் தயாராக இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டத்தில் ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை, வரலாற்றுச் சம்பவங்களை, அரிய ஆவணங்களைத் தொகுத்து செய்தி மக்கள் தொடர்புதுறையின் தமிழரசு பதிப்பகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட " ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி" என்ற நூலை முதல்வர் வெளியிட, கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி என்று அழைக்கப்படும் கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.

t1

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x