

தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை வலுவான சக்தியாக உருவாக்கிய சி.என்.அண்ணாதுரை அந்த இயக்கத்தின் தம்பிகளால் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்டார்.
காஞ்சிபுரத்தில் நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் 1909, செப்.15 ஆம் தேதி அண்ணாதுரை பிறந்தார். சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கிய அவர் குடும்ப சூழல் காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார்.
பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். 1934-ல் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு பொருளாதாரம் மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். அரசியல் பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு தி.க.வின் ‘விடுதலை’ பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றினார். பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தி.க.வில் இருந்து விலகி 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார் ‘திராவிட நாடு’ இதழையும் தொடங்கினார்.
எழுத்துப் பணியிலும் தீவிரமாக ஈடுபட்ட அண்ணா திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். இவரது சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தன. மணிக்கணக்கில், அடுக்குமொழியில் மடைதிறந்ததுபோல பேசுவதில் வல்லவர் அண்ணா. 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று அண்ணா முதல்வரானார்.
சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார். ‘மதறாஸ் மாநிலம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றினார். தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார். அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 59-வது வயதில் (1969) மறைந்தார். ஊடகங்கள், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத அந்த காலத்தில் அவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டனர்.வாழ்க்கைக்கு ஊக்கம் தரும் அவரது 10 மேற்கோள்கள் இதோ:
1. உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துகுரியவன் ; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும்.
2. போட்டியும், பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.
3. விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு
4. புனிதமானது உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளம்.
5. உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
6. சமத்துவம், சமதர்மம் போன்ற லட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம்
7. சாதிமுறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.
8. கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
9. எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்
10. ஒன்றே குலம், ஒருவனே தேவன்.