Last Updated : 15 Sep, 2022 04:15 AM

 

Published : 15 Sep 2022 04:15 AM
Last Updated : 15 Sep 2022 04:15 AM

தமிழகத்தில் கட்டிடங்களுக்கான தளப்பரப்பு குறியீடு உயர வாய்ப்பு - கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசுக்கு வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கட்டிடங்களுக்கான தளப்பரப்பு குறியீட்டை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை வீட்டுவசதித் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே வழங்கப்பட்ட தளப்பரப்பு குறியீட்டை சிலநேரங்களில் பூர்த்தி செய்ய முடியாத சூழல் இருப்பதால், சாலை, குடிநீர், மின் விநியோகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தரும்படி கட்டுமான வல்லுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2 மடங்கு எஃப்எஸ்ஐ அனுமதி

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் படி, சாலையின் அகலத்தின் அடிப்படையில் கட்டிடம் கட்டுவதற்கான தளப்பரப்பு குறியீடு (எஃப்எஸ்ஐ) வழங்கப்படுகிறது. குறிப்பாக சாலையின் அகலத்தை பொறுத்தும், நிலத்தின் அளவை பொறுத்தும் கட்டிடம் கட்டிக் கொள்ள முடியும். தற்போதுள்ள சூழலில் உயரமில்லாத கட்டிடங்களுக்கு 2 மடங்குஅளவுக்கு தளப்பரப்பு குறியீடு அனுமதிக் கப்படுகிறது. அதாவது 2,500 சதுரஅடி என்றால் தற்போது 2 மடங்கு அதாவது 5 ஆயிரம் சதுரஅடி கட்டிடம் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இதுதவிர, சாலையின் அகலம், கட்டிடத்தை சுற்றிலும் விடப்படும் ‘செட்பேக்’ பகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதிகளவில் நிலம் இருக்கும் பட்சத்தில், 15 மீட்டர் அகல சாலைக்கு 2.5 சதவீதம் வரையும், 18 மீட்டர் அகலமுள்ள சாலைக்கு3.25 சதவீதம் வரையும் தளப்பரப்பு குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. இவை உயரமாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு பொருந்தும்.

இதுதவிர, 18 மீட்டருக்கு அதிகமான அகலமுள்ள சாலைகளில் இடம் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக 50 சதவீதமும், 12 மீட்டர் முதல் 18 மீட்டருக்குள் இருந்தால் 40 சதவீதமும், 9 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை இருந்தால் 30 சதவீதமும் கூடுதல் தளப்பரப்பு குறியீடு வழங்கப்படுகிறது.

இவ்வாறு கூடுதல் தளப்பரப்பு குறியீடு பெற தளப்பரப்பு குறியீட்டின் குறிப்பிட்ட சதவீதம் அளவுக்கு, வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் ‘பிரீமியம் எஃப்எஸ்ஐ’ கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

அதாவது, அடுக்குமாடி கட்டிடம் என்றால் 40 சதவீதமும், இதர கட்டிடங்களுக்கு 50 சதவீதமும் பிரீமியம் எஃப்எஸ்ஐ கட்டணம் செலுத்த வேண்டும். இந்த தொகை செலுத்தப்படும் பட்சத்தில் கட்டிட அனுமதி வழங்கப்படும். இந்நிலையில், சமீபத்தில் இந்த பிரீமியம் எஃப்எஸ்ஐ கட்டணத்தில் சலுகையை வீட்டுவசதித் துறை அறிவித்தது. அதன்படி, மெட்ரோ ரயில் வழித்தடங்களில், வழித்தடத்தின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நிலங்களில், பிரீமியம் எஃப்எஸ்ஐ கட்டணமானது, ஏற்கெனவே அந்த இடத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது.

அதாவது, மெட்ரோ ரயில் வழித்தடத்தின் இருபுறமும் 500 மீட்டருக்குள் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வழக்கமான 40 சதவீதம் பிரீமியம் எஃப்எஸ்ஐ கட்டணம் 20 சதவீதமாகவும், இதர கட்டிடங்களுக்கு 50 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கேற்ப குடியிருப்புகளை அதிகளவில் நகர்ப்புறங்களில் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

4 சதவீதம் உயர்த்த பரிசீலனை

இந்த சூழலில், தமிழகம் முழுவதும் தளப்பரப்பு குறியீட்டை உயர்த்த ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பினர் (கிரெடய்) அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, தளப்பரப்பு குறியீட்டை 4 சதவீதம் அளவுக்கு உயர்த்தலாம் என தமிழக வீட்டுவசதித் துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தசூழலில், தளப்பரப்பு குறியீட்டை உயர்த்தும் போது, அதற்கேற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்று கட்டுமானத்துறையினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கட்டுநர் சங்கத்தின், நகராட்சிகள் மற்றும் டிடிசிபி குழு வின் தலைவர் எஸ்.ராமபிரபு கூறிய தாவது:

வீடு விலை குறைய வாய்ப்பு

தமிழகத்தில் தளப்பரப்பு குறியீட்டை உயர்த்த தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு உயர்த்தப்படும் பட்சத்தில் பிரீமியம் எஃப்எஸ்ஐ என்பது இருக்காது. தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 3.25 சதவீதம் வரை வழக்கமான எஃப்எஸ்ஐ அனுமதிக்கப்படுகிறது. அதற்கு பிரீமியம் எஃப்எஸ்ஐ என்றால் 4.87 சதவீதம் வரை கட்டிடம் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அதே நேரம், அடுக்குமாடி குடியிருப்புக்கு 4 சதவீதமாக வழக்கமான எஃப்எஸ்ஐ அளவை அரசு கொண்டு வந்தால் பிரீமியம் எனபது இருக்காது. ஆனால், எஃப்எஸ்ஐ உயர்த்தும் சூழலில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். சாலை வசதி, கழிவுநீர், குடிநீர் வசதிகள் கொண்டுவர வேண்டும். எஃப்எஸ்ஐ அதிகரிக்கும் போது வீடு வாங்குவோருக்கு விலை குறையும். அதே நேரம், நில உரிமையாளர்கள் விலையை உயர்த்தவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

7 கடற்கரை கிராமங்களில் எஃப்எஸ்ஐ உயர்த்த குழு

சென்னை பழைய மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட 7 கிராமங்களில் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. 2008-ம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டு, 0.8 சதவீதம் எஃப்எஸ்ஐ அளவுக்கு கட்டிடம் கட்ட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியில் தற்போது நிலங்களின் மதிப்பு உயர்ந்து, அதிகளவில் நில விற்பனையும் நடைபெற்றுள்ள சூழலில், எஃப்எஸ்ஐ அளவை உயர்த்த தமிழக அரசுக்கு கோரிக்கை வந்தது. இதை ஏற்று, இதற்கென வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஆலோசனை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.5 சதவீதம் வரை எஃப்எஸ்ஐ உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x