

சென்னை: ஓட்டுநர் உரிமத் தேர்வில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் மட்டும் ஓட்டுநர் பள்ளியில் பயின்றோரை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், மற்ற நாள்களில் இதர விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் தேர்வு வைக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கடந்த 12-ம் தேதி முதல் ஓட்டுநர், பழகுநர் தேர்வை் புறக்கணித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை, சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 2 நாள்கள் மட்டும் எங்களது மாணவர்களை அனுமதித்தால், அனைவராலும் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க முடியாது. இதுகுறித்த எங்களது நியாயமான கோரிக்கையை அமைச்சரிடம் தெரிவித்தோம்.
இது எங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், அடுத்தகட்ட போராட்டம் குறித்து தொழிற்சங்கத்தினரிடம் பேசி வருகிறோம்.
வழக்கமான முறையில், அனைத்து நாட்களிலும் ஓட்டுநர் தேர்வில் எங்களது மாணவர்களை அனுமதிக்காவிட்டால், முற்றுகைப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.