Published : 15 Sep 2022 06:40 AM
Last Updated : 15 Sep 2022 06:40 AM

சசிகலா புஷ்பா விவகாரத்தில் பாஜக மாநில நிர்வாகிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ராமநாதபுரம்: பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவிடம், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் வெளியான அவதூறு வீடியோ குறித்து புகார் அளிக்க உள்ளதாக மாவட்ட பாஜக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கூட்ட நெரிசலில் சசிகலா புஷ்பாவிடம், பொன்.பாலகணபதி அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் அதன் வீடியோ பதிவு பரவியது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம், பரமக்குடியில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பாவிடம், பாஜக மாநில பொதுச்செயலாளர் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் வரும் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆலோசனை பெற்று புகார்

இது குறித்து பாஜக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன் கூறியதாவது: மாநிலப் பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி மற்றும் மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா குறித்து சமூக வலைதளங்களில் வெளியான அவதூறு வீடியோ குறித்து மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளரிடம் ஆலோசனை பெற்று புகார் அளிக்க உள்ளோம்.

அதேசமயம் தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய விவரம் தெரியவில்லை. அதனால் அது குறித்து கருத்துத் தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x