மக்களின் கருத்துகளை ஏற்காத அரசு ஏன் கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்? - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் எம்எல்ஏ
வானதி சீனிவாசன் எம்எல்ஏ
Updated on
1 min read

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மாதம் ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்படும் என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும், மாதம் ஒருமுறை மின் கட்டணம்வசூலிப்பது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம், பெட்ரோல், டீசல்விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

திமுக அரசு, மிகமிக அத்தியாவசிய தேவையான மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த சில இடங்களில் மட்டும் கண் துடைப்புக்காக கருத்துக் கேட்புக் கூட்டங்களை மின் வாரியம் நடத்தியது.

அதில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என வலியுறுத்தினர். ஆனால், திமுக அரசு, விடாப்பிடியாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அது அமலுக்கும் வந்துவிட்டது. மக்களின் கருத்துக்களை, ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றால் எதற்காக கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்?

பருத்தி விலை உயர்வாலும், தட்டுப்பாட்டாலும் ஜவுளித்தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. எனவே, இந்நிலைமை சீராகும் வரை, மின்கட்டண உயர்வை தள்ளி வைக்க வேண்டும். மின்கட்டண உயர்வால் சூரியஒளி, காற்றாலை போன்ற மரபுசாராஎரிசக்தித்துறையில் புதிய முதலீடுகள் வருவது பாதிக்கும்.

மின்கட்டண உயர்வால் தொழில்கள் நிறைந்த கோவை, திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், கரூர் போன்றமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும். எனவே, தொழில்துறையினருக்கு மட்டுமல்ல, வீடுகள், கடைகளுக்கான மின்கட்டண உயர்வையும் ரத்து செய்ய வேண்டும்.

மரபுசாரா மின் உற்பத்தியை அதிகரித்தல், மின்வாரியத்தில் ஊழல் முறைகேடுகளை தவிர்த்து நிர்வாகத்தை சீரமைத்தல், தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்காமல் மின்உற்பத்தியைஅதிகரித்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின் வாரியத்தின் நஷ்டத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in