Published : 15 Sep 2022 06:44 AM
Last Updated : 15 Sep 2022 06:44 AM

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர் நியமனத்துக்கு எதிர்ப்பு: தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதைக் கண்டித்து அரசு விரைவு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னை, பல்லவன் இல்லம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது படம்: ம.பிரபு

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 400 ஓட்டுநர்களை தற்காலிகமாக ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் நியமிக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, செப்.14-ம் தேதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கூடாது எனக்கூறி, சென்னை, பல்லவன் சாலையில் உள்ள விரைவுபோக்குவரத்துக் கழகத் தலைமையகம் முன் தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: விரைவு போக்குவரத்துக் கழகம் நீண்ட தூர பயண சேவையை அளிக்கக் கூடியதாகும். இதில் தகுதி வாய்ந்த ஓட்டுநர்கள் இருப்பது பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கு உகந்தது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன.

அதில் ஒப்பந்த முறையில் ஓட்டுநர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. நிரந்தரத் தன்மை உள்ள வேலைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என தொழிலாளர் சட்டமும் தெளிவுபடுத்துகிறது. மேலும், இது போக்குவரத்துக் கழகங்களை பாதிப்பதோடு, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை உருவாக்கும்.

எனவே, நேரடியாக காலிப் பணியிடங்களை நிர்வாகம் நிரப்ப வேண்டும். இதேபோல் அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் எல்பிஎப் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் வி.தயானந்தம், ஏஐடியுசி செயலாளர் இ.சுப்பையா சூர்யகுமார், எச்எம்எஸ் மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் சுப்பிரமணிய பிள்ளை, எம்எல்எப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்புராமன், திராவிட தொழிலாளர் சங்கத்தலைவர் ராஜூ உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதையடுத்து, தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குத் தெரிவிப்பதாகவும், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை எனவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x