

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மிளகாய் சாகுபடி பரப்பை 2,300 ஏக்கராக அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தோட்டக்கலைத் துறை ஈடுபட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மட்டுமல்லாமல், காய்கறி மற்றும் பூக்கள், கரும்பு, மாம்பழம் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இதில் கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை உள்ளிட்ட காய்கறி வகைகள் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மிளகாய் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் காய்கறி வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில் மிளகாய் சாகுபடியும் குறிப்பிடத்தக்க வகையில் நடக்கிறது. இதன்படி பச்சை மிளகாயாகவும், காய்ந்த மிளகாயாகவும் பயன்படுத்தும் வகையில் பிரியங்கா, அனன்யா, பங்காரம் ஆகிய ரகங்களை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
ஜனவரி- பிப்ரவரி, ஜூன் - ஜூலை மாதங்களில் மிளகாய் சாகுபடி செய்யும் பருவம் என்றாலும் குளிர்காலமான செப்டம்பர்- அக்டோபர் மாதங்களிலும் மிளகாய் சாகுபடி நடக்கிறது. பூச்சி தொல்லை பாதிப்புகள் பெருமளவில் இருக்காது என்பதால், இந்த மாதங்களிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த மிளகாய் சாகுபடி, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2021-22-ம் ஆண்டில் 1,700 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டது. தற்போது இதனை சுமார் 2,300 ஏக்கராக அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
அதற்காக, மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டம் ஆகியவற்றின் மூலம் 523 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்ய ஏதுவாக மிளகாய் நாற்று மற்றும் இடு பொருட்களுக்காக ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என மானியம் வழங்குவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்விரு திட்டங்களுக்காக, திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகையில் உள்ள அரசு தோட்ட கலைப் பண்ணையில் 27.40 லட்சம் குழித்தட்டு மிளகாய் நாற்றுகள் தயாராகி வருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.