Published : 15 Sep 2022 06:17 AM
Last Updated : 15 Sep 2022 06:17 AM
சென்னை: அஞ்சல் துறையை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் செல்வகுமார் கூறினார்.
அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலம் சார்பில், ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு மண்டல மேன்மை விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2021-22-ம்ஆண்டு மண்டல மேன்மைவிருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. 24 பிரிவுகளில் 75 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் பி.செல்வகுமார் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை தேர்வு செய்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மற்ற ஊழியர்களும் இந்த விருதைப் பெற வேண்டும் என்ற ஊக்கம் ஏற்படும்.
இந்திய அஞ்சல் துறை நாடு முழுவதும் 1.50 கோடி அஞ்சல் நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அஞ்சல் வட்டத்தில் மொத்த வருவாயில் சென்னை நகர மண்டலம் மற்றும் மெயில், வர்த்தக வளர்ச்சி மண்டலம் மூலமாக 3-ல் 2 பங்கு வருவாய் கிடைக்கிறது.
அஞ்சல் துறையை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. அஞ்சல் துறை வழக்கமான அஞ்சல்சேவை வழங்குவதைத் தவிர பாஸ்போர்ட் சேவை, ஆதார், மின்னணு வாழ்நாள் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட கூடுதல் சேவைகளையும் வழங்கி வருகிறது.
அண்மையில், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அஞ்சல் துறை மூலம் 9 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. தரமான சேவைகள் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு செல்வகுமார் கூறினார்.
விழாவில் பேசிய சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர்ஜி.நட்ராஜன், "கடந்த நிதியாண்டில் 3 மாதம் கரோனா தொற்று பரவியதால் அஞ்சல் துறை பணியில் சற்று தொய்வு ஏற்பட்ட போதும் எஞ்சிய 9 மாதத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டது.
அஞ்சல் சேவை மக்கள் சேவை என்பதுதான் அஞ்சல் துறையின் அடிப்படைக் கொள்கை. சென்னை நகர மண்டலத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில், பெரியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 13 லட்சம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன.
அதேபோல், கடந்த 3 ஆண்டுகளில் 37 ஆயிரம் பாஸ்போர்ட், 47 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு அரசு ஓய்வூதியதாரர்கள் 50 ஆயிரம் பேருக்கு மின்னணு வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் பேருக்கும் இச்சான்றிதழ் அவர்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கிராம மக்களுக்கு ரூ.133 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது." என்றார்.
விழாவில், தலைமை அஞ்சல்துறை தலைவர் (மெயில், வர்த்தக வளர்ச்சி) ஸ்ரீதேவி, சென்னைநகர மண்டல அஞ்சல் சேவைகள்இயக்குநர் கே.சோமசுந்தரம், உதவி இயக்குநர் (வணிக மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம்) ஜி.எஸ்.சுஜாதா, தமிழ்நாடு வட்ட அஞ்சல் சேவைகள் இயக்குநர் பி.ஆறுமுகம் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT