

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் நிரப்புவதில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், ஈரோடு சிவகிரியில் உள்ள உறுப்புக் கல்லூரியின் பணியிடங்கள் என 88 காலிப் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவு செய்தது. தகுதிவாய்ந்த நபர்களை இனசுழற்சி அடிப்படையில், நேர்முகத் தேர்வு மூலம் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஆக.10-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு மாறாக, முன்னறிவிப்பு ஏதுமின்றி முன்கூட்டியே விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததையடுத்து ஆக.22-ம் தேதி வரை காலக் கெடு நீட்டிக்கப்பட்டு 2601 விண்ணப்பங்கள் பெறப்பட் டன. அதில் இருந்து 2297 பேர் நேர் முகத் தேர்வுக்கு அழைக்கப் பட்டனர்.
கடந்த அக்.26-ம் தேதி முதல் நடைபெற்ற நேர்முகத் தேர்வைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியலுக்கு நவ.22-ம் தேதி ஆட்சிக்குழு கூட்டம் ஒப்புதல் அளித்தது. அதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளுக்கான 68 பணியிடங்களுக்கும், உறுப்புக் கல்லூரியில் 12 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பி.எஸ்.மோகன் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பொருளாதாரத்துறை பேராசியராக பணியாற்றும் பி.வனிதா பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காலிப் பணியிடங் களுக்கான நேர்காணலில் முறைகேடுகள் நடந்ததாகவும், லட்சக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த புகார்களை பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட அனைவரும் மறுத்து வந்தனர். இந்த நிலையில், பதிவாளர் பதவி விலகியிருப்பது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் தெரிவித்ததாவது: பணி நியமனம் தொடர்பாக நவ.21-ம் தேதி அரசிடம் இருந்து கடிதம் வந்தது. அது முதலில் பதிவாளரின் கவனத்துக்குச் சென்றது. ஆனால் அது உடனே துணைவேந்தரிடம் வந்து சேரவில்லை எனத் தெரிகிறது. நவ.25-ம் தேதி தான் துணைவேந்தர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. இதனிடையே தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிப் பட்டியலுக்கு நவ.22-ம் தேதி ஆட்சிக்குழு கூட்டம் ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு முறைகேடுகள் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. இதனாலேயே அவர் பதவி விலகி இருக்கலாம் என கூறப்படுகிறது என்றனர்.