

கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி கல்குவாரிக்கு சொந்தமான வேன் மோதி கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது சடலத்தை பெற மறுத்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இந்தப் போராட்டத்தைத் தூண்டியதாக 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, விவசாயியின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
கரூர் மாவட்டம் குப்பம் அருகேயுள்ள காளிபாளையம் வெட்டுகாட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெகநாதன்(49), விவசாயி. இவர், சட்டவிரோதமாக இயங்கி வந்த கல் குவாரிக்கு எதிராக போராடியதால், செப்.10-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கல்குவாரி வேனால் மோதி கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குவாரி உரிமையாளர் செல்வக்குமார்(39), வேன் ஓட்டுநர் சக்திவேல்(24), குவாரி ஊழியர் ரஞ்சித்(44) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகநாதனின் உடல் செப்.11-ம் தேதி உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், ஜெகநாதனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக சடலத்தைப் பெற மறுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களுடன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா.சா.முகிலன், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஆட்சியர் த.பிரபுசங்கர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரின் சுயவிருப்ப நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஜெகநாதனின் மனைவி ரேவதியிடம் வழங்கினார். ஆனால், அதன்பிறகும் சடலத்தை பெற மறுத்து, அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தைத் தூண்டி விடுவதாகக் கூறி ரா.சா.முகிலனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான பசுபதிபாளையம் போலீஸாரும், ந.சண்முகத்தை அவரது வீட்டில் தாந்தோணிமலை போலீஸாரும் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் ஜெகநாதனின் மனைவி ரேவதி அளித்த மனுவில், “என் கணவரின் உடல் என்னிடம் காட்டப்படாமல், எங்களிடம் எந்தவித அனுமதியோ, கையெழுத்தோ பெறப்படாமல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.
அவரை வாகனத்தால் மோதி மட்டும் கொல்லாமல் சுத்தியல், அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியிருக்கலாம் என உறுதியாக தெரிகிறது.
எனவே, என் கணவரின் உடலை மறுகூராய்வு செய்து, அதன் வீடியோ பதிவு பிரதியை வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க ஆட்சியர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த ரேவதி, தன் கணவரின் உடலை பெற சம்மதம் தெரிவித்து, கையெழுத்திட்டார். தொடர்ந்து, ஜெகநாதனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இதற்கிடையே, ரா.சா.முகிலன், ந.சண்முகம் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ஜோதிபாசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல, கைது செய்யப்பட்ட முகிலன், சண்முகம் ஆகியோரை விடுவிக்கக் கோரி கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கல்லூரி சாலை பிரிவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சாமானிய மக்கள் நலக் கட்சியினர்
நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 13 பேரை பசுபதிபாளையம போலீஸார் கைது செய்தனர்.