Published : 14 Sep 2022 06:00 PM
Last Updated : 14 Sep 2022 06:00 PM

இபிஎஸ்ஸுக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் மேல்நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாக கூறி 2018-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்தப் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ, ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால், அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி கோரினார்.அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுதம், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, "ஏற்கெனவே இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையருக்கு அறிக்கை அளித்துள்ளது. ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்பார்" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், "லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x