நாராயணசாமி | கோப்புப் படம்
நாராயணசாமி | கோப்புப் படம்

“ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” - தமிழிசை மீது நாராயணசாமி கடும் விமர்சனம்

Published on

புதுச்சேரி: “ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசையை அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பாத யாத்திரையை சகித்துக்கொள்ள முடியாமல் அவர் அணிந்திருந்த டீ-சர்ட் பற்றி பாஜகவினர் விமர்சித்துள்ளனர். அது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்ட். பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 3 முறை உடை மாற்றுகிறார். அவை இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்காவில் இருந்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அணியும் ஆடைகளும் வெளிநாட்டிலிருந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாக கூறிக்கொண்டு தேசியக்கொடியை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்தனர். காங்கிரசை குறைகூற பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை.

பாதயாத்திரை பற்றி ஏளனமாக ஆளுநர் தமிழிசையும் பேசியுள்ளார். நீண்ட நித்திரையில் இருந்தவர்கள் தேசத்தை ஒருங்கிணைக்க பாதயாத்திரை போவதாக கூறியுள்ளார். தெலங்கானாவுக்குத்தான் அவர் ஆளுநர். அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அனைவரும் தமிழிசையை உதாசீனப்படுத்துகின்றனர். எனவேதான் புதுச்சேரியில் அதிக நாட்கள் தங்கியுள்ளார். ஆளுநர் பதவியில் உள்ளவர்கள் அரசியல் செய்யக்கூடாது. அவர் பாதயாத்திரையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. அவர் அரசியல் செய்ய விரும்பினால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யலாம். உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு கீழ்த்தரமான அரசியல் செய்யக்கூடாது.

புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை மக்களின் சொத்துக்கள் அபகரிப்பு தொடர்பாக பிரான்சில் போராட்டம் நடத்தியுள்ளனர். இது இந்தியாவுக்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ரங்கசாமி பதவிக்கு வரும்போதெல்லாம் பிரெஞ்சு குடிமக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது. பல காவல் நிலையங்களில் புகார் உள்ளது. ஆனால் ரங்கசாமி புகாரே இல்லை என தவறான தகவல் அளிக்கிறார். பிரெஞ்சு துாதரே நேரடியாக சட்டசபைக்கு வந்து ரங்கசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்து. புதுச்சேரியில் ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு முதல்வர் ரங்கசாமி அலுவலகம் ரவுடிகள் கூடாரமாக மாறியதுதான் காரணம். முதல்வர் அலுவலகத்திலேயே ரவுடிகள் இருந்தால் காவல் துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் ஒட்டுமொத்த நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது" என்று நாராயணசாமி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in